பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7շ கால ஆராய்ச்சி வரலாற்றையே அவளது பெயர் கூறாமல் செயலைமட்டும் கூறி அவள் கரிகாலன் மகள் என்று இளங்கோவடிகள் வஞ்சினமாலையில் (வரி 11-15) கூறியுள்ளார். புலவர் சிலர் கூறாதுவிட்ட உறவு முறையை அவர் காலத்துப் புலவரோ பிற்காலப் புலவரோ குறிப்பது தவறன்றோ! மேலும் கரிகாலனை அடுத்து வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். அவர் சேர அரச மரபினர். அவரே, சேர அரச மகன் (வஞ்சிக்கோன்) ஒருவன் மனைவியே கரிகாலன் மகள் என்று கூறித் தொகை நூற்பாடல்களில் கூறப்பட்டுள்ள ஆதிமந்தியின் கற்பின் திறத்தைக் கூறியுள்ளார். எனவே, அவரால் குறிக்கப்பட்டது ஆதிமந்தி வரலாறு என்று கோடலே பொருத்தமுடையது. 7. சங்க காலத்தில் வேங்கடம் மாமூலனாரால், 'விழவுடை விழுச்சீர் வேங்கடம்" (அகம் 61) என்று கூறப்பட்டுள்ளது. எனவே, வேங்கடமலையில் விழாக்கள் நடைபெற்று வந்தன என்பது இதனால் தெரிகின்றதன்றோ மலைமீது விழாக்கள் நடைபெற்றன என்பது கொண்டு, அங்குக் கோவில் இருந்தது என்பதை எளிதில் அறியலாமன்றோ? உண்மை இங்ங்னமாக இருப்ப, சங்க கால வேங்கடம் சமயச் சிறப்புப் பெற்றிருக்கவில்லை என்று பிள்ளையவர்கள் கூறியிருப்பது உண்மைக்கு மாறுபட்டதாகும். மாமூலனார் அகப்பொருள் பற்றிய பாடலில் ஒர் எடுத்துக் காட்டுக்காக இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் வேங்கடத்தில் எத்தகைய கோவில் இருந்தது என்று அவர் கூறவில்லை. அதனால் வேங்கடத்தில் கோவில் இல்லை என்று முடிவு கட்டுதல் தவறு. கோவிலைப் பற்றிப் பேசவேண்டிய இடம் அதுவன்று; ஆதலின் அவர் பேசவில்லை. கோவிலைப் பற்றிக் கூற வேண்டிய இடத்தில் மாங்காட்டு மறையவன், தன் கண்ணாற் கண்டு வழிபட்ட வேங்கடத்தானது நின்ற கோலத்தைத் தான் கண்டவாறு கூறியதாக அடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்பித்து மகிழ்ந்தனர் என்று கோடலே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாகும். காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாக இந்திர விழவு நடைபெற்றதைச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் விரிவாகக் கூறியுள்ளன. இதே இந்திர விழவு சிற்றுாரிலும் அக்காலத்தில் நடைபெற்றுள்ளது என்பதை ஐங்குறு நூற்றுச் செய்யுள் ஒன்று (62) குறித்துள்ளது. ஆயின், அதுபற்றிய பிற விவரங்கள் அச்செய்யுளில் இல்லை. ஏன்? அப்பாடல், குறிப்பிட்ட ஒர் அகப்பொருள் கருத்தைக் கூறவந்ததே தவிர இந்திர விழவினை விளக்கப் பாடப்பட்டதன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/79&oldid=793410" இலிருந்து மீள்விக்கப்பட்டது