பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கலித்தொகையின் காலம் கலித்தொகையின் புதுமைகள் 1, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நான்கு நூல்களும் அகவற்பாவில் அமைந்த அகப்பொருள் செய்யுட்களைக் கொண்டவை. மேலும் அவையனைத்தும் அகனைந்திணை பற்றிய செய்திகளையே கொண்டவை; தொல்காப்பியருடைய களவியலுக்கும் கற்பியலுக்கும் பெரும்பாலும் இலக்கியமாக அமைந்தவை. கலித்தொகைப் பாடல்கள் கலிப்பாவில் அமைந்தவை. இவற்றுள் சில 80 அடி நீளமும் உடையவை; தொல்காப்பியர் பொருளியலில் கூறியுள்ள விதிகட்கு இலக்கியமாக அமைந்தவை; அதனால் கைக்கிளை, பெருந்திணை பற்றிய பாடல்களும் மடலேறுதல் பற்றிய பாடல்களும் இழிந்தோர் காதல் பற்றிய பாடல்களும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. 2. நற்றிணை முதலிய அகநூல்களில் தலைவியின் முகம், கூந்தல், உடல்வளம், அவளது நலம் முதலியவற்றிற்குத் தமிழ் நாட்டுப் பகுதிகள், நகரங்கள் முதலியனவே உவமைகளாய் வந்துள்ளன. கலித்தொகையில் வந்துள்ள உவமைகளுள் பெரும்பாலன, நற்றிணைமுதலிய நூல்களில் காணப் பெறாத இதிகாச புராணக் கதைகளாகவே அமைந்துள்ளன. 3. நற்றிணை முதலிய பாடல்களின் நடை மிடுக்குடையது; கலித்தொகைப் பாடல்களின் நடைமிடுக்குத் தளர்ந்தது. 4. நற்றிணை முதலிய நூற்பாக்களில் பேரரசர், சிற்றரசர் நாடுகளும் நகரங்களும் மலைகளும் ஆறுகளும் இடம் பெற்றுள்ளன. ஆயின், கலித்தொகைப் பாக்களிற் பாண்டியன் (57), கூடல் (56, 91, 92), வையை (97). பொதியில் (57) மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களோ அவர்தம் ஊர்களோ பிறவோ குறிக்கப்படவில்லை. இது கவனிக்கத்தகும் செய்தியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/84&oldid=793425" இலிருந்து மீள்விக்கப்பட்டது