பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 131 "மாதொரு பாகனாகி அதனால் ஒரு பாகத்தே சேலையும் உடையாக விளங்க வீற்றிருக்கும் அழகனே! தேவர்களாலும் அளந்து அறிதற்கு ஒண்ணாத பெருமானே! செங்கழு நீர் மாலையை அணிந்திருக்கும் அழகனே! அழகிய மார்பகத்தை உடையோனே! கடல் போன்று அடக்கமின்றி ஆர்ப்பரித்துத் திரிந்த முப்புரத்து அசுரர்களின் கோட்டைகளைச் சிரித்தே எரித்தருளிய சிவபிரானே! திரு ஆரூரனே! வீதி விடங்கனே! நின்னைப் பிரியாமல் என்றுஞ் சுமந்திருக்கும் பேறு பெற்றது நின் இடபம் அல்லவோ" என்பது பொருள். மாவலி வாணா மாவலி வாணர் என்னும் வாணர்குலத்து அரசர்கள். ஒரு காலத்தே தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. அப்பொழுது, இவர்களுள் ஒருவன், தன்னைப் பற்றிச் செருக்குடையோனாகத் திகழக் காளமேகத்தின் நெஞ்சத்தின்கண் வேதனை பெருகுகின்றது. புகழ்பெற்ற பாண்டியவரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக்கொண்ட வாணனை அவர் வெறுப்புடனேயே கருதுகின்றார். அவனை இகழ்ந்து சொல்லிய செய்யுள் இது. சொக்கன் மதுரையில் தொண்டர்க்கு முன்னவிழ்த்த பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ-மிக்க கரசரணா வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம் அரசரணா மாவலிவா னா! (211) இதன்பாற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர். மாவலிவாணனே! சொக்கேசப்பெருமான், அந்நாளிலே தம் தொண்டரான வாதவூரடிகளின் பொருட்டாக, மதுரை நகரிற் கொண்டுவிட்ட பொய்க்குதிரைகள், போர்க்களத்திற்குப் போகக் கூடியவையோ? அவை போகாவன்றே! அது போலவே, பருத்த காலுங் கையுங்கொண்டு உருவால், பெரிதாக விளங்குபவனே! விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்று திரியும் இழிதொழிலாளர்க்கு அரசனே நீதான் இந் நாட்டு மக்களைக் காத்துப் பேணுதற்கு ஏற்ற அரசாகிய அரணாவாயோ? 'நீ ஆக மாட்டாய்' என்பது கருத்து.