உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள்


நா: - ஓடும் இருக்கும் - (சிலபோது) ஓடித்திரியும் (சில போது) இருந்தவிடத்திலேயே இருக்கவும் செய்யும்; அதன் உள்வாய் வெளுத்திருக்கும் - அதனுடைய வாயின் உட்புறம் வெண்மையா யிருக்கும்; நாடும் குலை தனக்கு நாணாது - அதற்கு விருப்பமான குரைத்தலிலே ஈடுபடுவதில் அது வெட்கப்படுவதே இல்லை (ஓயாது குரைத்துக் கொண்டேயிருக்கும்).

மீனுக்கும் பேனுக்கும்


மன்னீரி லேபிறக்கு மற்றலையி லேமேயும்
பின்னிச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலையரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரியா மே. (56)

தேன் உந்து சோலைத் திருமலைராயன் வரையில் - தேன் பாய்கின்ற சோலைகளைக் கொண்ட திருமலைராயனின் மலையிடத்தே.

மீனானது: மன் நீரிலே பிறக்கும் - நிலைபெற்ற நீரிலே தோன்றும், மற்று அலையிலே மேயும் - அந்த நீர் அலைகளிடத்தே மேய்ந்து கொண்டிருக்கும், பின் நீச்சின் குத்தும் - நீந்தும் பொழுது பின்தொடர்ந்து குத்துகின்ற இயல்பும் உடையதாயிருக்கும்;

பேனானது: மன் ஈரிலே பிறக்கும் - மலையில் நிலைத்த பேன் முட்டையிடத்திலிருந்து தோன்றும், மன் தலையிலே மேயும் - அடர்த்தியான தலைமயிரிலே திரிந்து செல்லும், பின் ஈச்சின் குத்தும் - பின் பெண்களால்எடுத்து 'ஈச' என்னும் ஒலியுடனே குத்தவும் படும்.

பெருமையால் - இப்படியான பெருமைகளால், மீனும் பேனும் தம்முள் ஒப்படையன என்று,சொன்னேன் கேள் - யான் சொன்னேன், இதனைக் கேட்பாயாக.

பனைமரத்திற்கும் வேசைக்கும்


கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டிப் பன்னாடை இழுத்தலால்-முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை யருந்துதலா லப்பனையும்
வேசையென லாமே விரைந்து. (57)

பனைமரத்தில் : - கட்டித் தழுவுதலால் - ஏறும்பொழுது கட்டித் தழுவிக்கொண்டே ஏறுதலாலும், கால்சேர ஏறுதலால் - இரு கால்களையும் சேரவைத்து ஏறுதலாலும், எட்டிப்பன்னாடை இழுத்தலால் - உச்சியருகிலே சென்றதும் பன்னாடையை எட்டி இழுத்துக் கட்டுவதனாலும், முட்டப் போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால்-நெருங்கிச்சென்று ஆசையூட்டக்கூடிய கள்ளினை அருந்துதலாலும்;