116
திரு. கே.டி.கே. தங்கமணி : இல்லை
காவல்துறை பற்றி
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இதிலே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி பங்கு கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். பார்வர்டு பிளாக் இல்லை. திருப்பூர் மொய்தீன் சொல்லுகிறார்கள், முஸ்லீம் லீக் இல்லை என்று. சுரேந்திரன் சொல்கிறார் பிரஜா சோஷலிஸ்டு கட்சி பங்கு கொள்ளவில்லை என்று. ஆனாலும் ஆளுங்கட்சி நீங்கலாக மற்ற எல்லாக் கட்சிகளும் இந்த இயக்கத்தில் பங்கு கொண்டிருப்பதாக அந்த இயக்கத்தின் தலைவர் கூறினார் என்று செய்தி போடப்படுகிறது. அத்தோடு விட்டால் பரவாயில்லை.
திரு. ஆர். பொன்னப்ப நாடார் : சட்டமன்ற உறுப்பினர்கள் யாராவது இருந்தார்கள் என்று பத்திரிகையிலே போடப்பட்டிருக்கிறதா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இல்லை, உணவு அமைச்சர் ப.உ. சண்முகத்தின் சகோதரி மகன் பன்னீர்செல்வம் (பழைய காங்கிரஸ்) உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.' (சிரிப்பு). இது தினமணிச் செய்தி. நான் வேறு சில பத்திரிகைகளில் இம்மாதிரிச் செய்தி வருவதை உள்ளபடியே ஆட்சேபிக்கவில்லை. அது அவர்களுடைய கட்சியின் பழக்கம் ஆனால் அமைச்சர் ப. உ. சண்முகத்திற்குப் பன்னீர்செல்வம் என்ற மருமகன் இருக்கிறாரா என்றால், இல்லை. நான் விசாரித்தேன். பழைய காங்கிரஸ் என்று போடப் பட்டிருக்கிறது. அதில் ஆச்சரியம்கூட இல்லை. தகப்பனார் காங்கிரஸ். மகன் திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கலாம். டாக்டர் சுப்பராயன் காங்கிரஸ். மோகன் குமாரமங்கலம் கம்யூனிஸ்ட் என்று இருந்தார்கள். ராஜாஜி சுதந்திரா, நரசிம்மன் அப்போது காங்கிரஸ் என்று இருந்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இருப்பது வியப்பிற்குரியது இல்லை. ஆனால் இந்த ஆச்சரியமான விஷயம் குறிப்பிடத்தக்க விஷயம் என்று போடப்பட்டிருப்பது உண்மையா என்றால், இல்லை. யார் அந்த பன்னீர்செல்வம் என்று அவனைப் பற்றி விசாரித்தேன்.