கலைஞரின் சட்டமன்ற உரைகள்
461
முடிய வேண்டும் என்பதற்காக, இதற்கும் ஒரு தனிக் கோர்ட் அமைக்கின்ற முயற்சியை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், விரைவிலே அந்தத் தனிக் கோர்ட் அமையும் என்பதையும் இந்த அவைக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
வெடிகுண்டு கலாசாரத்தைப் பற்றி திருநாவுக்கரசு அவர்களும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும். மற்றவர்களும் இங்கே எடுத்துக்காட்டினார்கள். வெடித்தவைகள் எல்லாம் வெடிகுண்டுகள் அல்ல என்பதை நாம் ஞாபகத்திலே வைத்துக்கொள்ள வேண்டும். வெடிகுண்டுகள் ஒரு கட்டிடத்தை பிளக்கக் கூடிய அளவுக்கு ஆற்றல் வாய்ந்த வெடிகுண்டுகள், அதாவது 'பாம்'. அஃதன்னியில் நாம் தீபாவளி காலத்திலே கையிலே வாங்கி வைத்து சுவரிலே அடிக்கின்ற வெங்காய வெடிகளைக்கூட வெடிகுண்டு வரிசையிலே சேர்த்த காரணத்தால் தான் அந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி நான் சொல்கிறேன் எல்லாமே வெடிகுண்டுகள் : வெடித்த காரணத்தால் வெடிகுண்டுகள் என்ற அளவிலே அவைகள் பெயரிடப்பட்டு விட்டன என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் கடந்த காலத்திலே அந்த வெடிகுண்டால் ஆர்.எஸ்.எஸ்.ஸினுடைய பில்டிங் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட்டு 11 பேர் கொல்லப் பட்டார்கள் என்பதும் அதற்குப் பிறகு இன்னொரு நிகழ்ச்சியில் அந்த வெடிகுண்டால் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களுடைய கட்டிடம் இடிக்கப்பட்டு சிலர் மாண்டார்கள் என்பது நாடறிந்த உண்மையாகும். சென்னைக்கருகில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கொடுங்கையூர் நிகழ்ச்சியைப் பற்றி இங்கே குறிப்பிட்டிருக் கிறார்கள். இந்த கொடுங்கையூரிலே அந்த வெடிமருந்து பொருள்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் சென்னை மாநகரம் ஒரு மும்பை என்ற நிலையை அடைந்திருக்கும் என்பதை இன்று அல்ல அந்தப் பொருள்களையெல்லாம் பார்த்த எதிர்க் கட்சித் தலைவரும் மற்றும் நம்முடைய கட்சிகளின் தலைவர்களும் இந்த அவையிலேயே பேசியவை இன்னமும் என் காதுகளில் ரீங்காரம் செய்துகொண்டிருப்பதை நான் மறந்துவிட வில்லை.