கலைஞரின் சட்டமன்ற உரைகள்
47
குறையத்தான் போலீஸ் இலாகாவின் திறமை அதிகரித்திருக்கிறது என்று வெளிப்படையான அர்த்தம். அந்த வகையில் உலகத்திலே சிறந்த போலீஸ் படை என்று அழைக்கத் தகுந்தது. பிரிட்டிஷ் போலீஸ் படை என்று குறிப்பிடப்படுகிறது. அந்தப் பெருமையை அந்த போலீஸ் படைக்கு அளித்த பெருமைக்குரியவர்கள், அதைத் திட்டமிட்டு நிறுவிய, இங்கிலாந்து நாட்டில் போலீஸ் கமிஷனர்களாக இருந்த ரோவன், மேயின் ஆகிய இரண்டு பேர்களும் ஆவர். அவர்கள் போலீஸ்காரர்கள் கடமைகளைப் பற்றி எழுதிய நூல் ஸ்காட்லண்டு யார்டு நூலகத்தில் இருக்கிறது. அந்த நூலில் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்; "உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நிதானமிழக்காமல், செயலாற்றுவதே ஒரு போலீஸ் அதிகாரிக்குத் தேவையான சிறந்த தகுதி என்பதை ஒரு போலீஸ் வீரன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நிதானமாகவும், உறுதியுடனும், ஒரு போலீஸ் வீரன் கடமை யாற்றினால், அவசியமேற்பட்டால், அருகில் இருப்பவர்களும் அவனுக்கு உதவி செய்வார்கள்” என்று கூறிவிட்டு, போலீஸ் படையின் நோக்கம் பற்றிக் கூறும்போது, "குற்றங்களைத் தடுப்பதே முக்கிய நோக்கம் என்பதை ஒவ்வொரு போலீஸ் வீரரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். போலீஸ் படையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தனக்குத்தானே காவல் என்ற நினைவுடன் ஒழுக்கம் பேணவேண்டும். குற்றங்கள் இல்லாது ஒழிந்தால் அதுவே போலீஸ் படையின் திறமைக்குச் சிறந்த சான்று ஆகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள், அந்த நூலிலே.
பிரிட்டனிலே போலீஸ்காரர்கள் வெறும் காவல் துறைப் பணிகளை மட்டுமே கவனிப்பது என்பது இல்லை. கிராமப் பகுதிகளுக்கும், விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளின் தேவைகளையும் கவனிக்கும் பணிகளையும் ஏற்றுச் செய்கிறார்கள். பிரிட்டன் நாட்டில் போலீஸ்காரர்களுடைய வரலாற்றினைப் படிக்கும்போது பிரிட்டானிய நாட்டிலே அபாயகரமான குற்றவாளிகளை, தப்பி ஓடுவார்களோ என்று, ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ அழைத்துச் செல்லும் போதே விலங்கிடுகிறார்கள். ஆனால், இங்கே விலைவாசிப் போராட்டத்தின் போது, நண்பர் பாலகிருஷ்ணன் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது எவ்வாறு? எவ்வளவு பொறுப்பான இடத்தில் இருக்கிறவர்? எத்தனை மக்களுடைய வாக்குகளைப் பெற்று, இந்த மன்றத்திலே வீற்றிருக்கிறார்?