கலைஞரின் சட்டமன்ற உரைகள்
487
பாதுகாப்புப் பணியிலே அவசரக் காலங்களிலும் பொது நிகழ்ச்சிகளின்போது ஈடுபடுகின்ற காவல் பணியாளர்களுக்குத் தற்போதைய விலைவாசி நிலவரத்தைக் கருத்திற்கொண்டு, இங்கே திரு. ரங்கநாதன் போன்றவர்கள் எல்லாம் எடுத்துச் சொன்ன அந்த உருக்கமான வேண்டுகோளையெல்லாம் ஏற்று, இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு உணவுப் படி ரூ. 16-லிருந்து ரூ. 25 என்றும் தலைமைக் காவலர் முதல்நிலைக் காவலர்களுக்கு ரூ. 20-லிருந்து ரூ. 30 என்றும், ஆய்வாளர் / உதவி ஆய்வாளர்களுக்கு ரூ. 30 லிருந்து ரூ. 45 என்றும் உயர்த்தப்படும்.
காவர்களுக்கு தற்போது உணவு மானியத் திட்டத்தின் அடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பாமாலின் எண்ணெய் ஆகியவை 50 விழுக்காடு மானியத் தொகையில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. துவரம்பருப்பு கிலோ ஒன்றுக்கு 4 ரூபாய் வீதமும், உளுத்தம்பருப்புக்கு ரூ. 3 வீதமும், ரவை, மைதா ஆகியவைகளுக்கு ரூ. 1.50 வீதமும் இப்போது மானியத் தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி ஏற்றத்தினைக் கருத்தில்கொண்டும் காவலர்களின் நலன் கருதியும் மானியத் தொகை கிலோ ஒன்றுக்கு, துவரம்பருப்புக்கு தற்போது உள்ளது ரூ. 4 என்பது இனிமேல் ரூ. 10 ஆக உயர்த்தப்படும். ரவை, மைதாவுக்கு தற்போது உள்ளது ரூ. 1.50 என்பது ரூ. 3.00 ஆக உயர்த்தப்படும்.
தமிழகக் காவல் துறையினருக்கு இதுவரை குடும்பக் கார்டுகள் வழங்கப்படுவதில்லை. கழக அரசு காவல் துறையிலுள்ள 80,000 பேர்களுக்கு குடும்பக் கார்டுகளை புதிதாக வழங்குவது என்றும் அவர்கள் அந்தக் கார்டுகளைப் பயன்படுத்தி ரேஷன் கடைகளில் தற்போது பொதுமக்களுக்கு மானிய விலையிலே மண்ணெண்ணெய் வழங்குவதைப் போல பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ரேஷனிலே அவர்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையிலே தரப்படும். அதற்கான ரேஷன் கார்டுகள் அவர்களுக்கு தனியாக வழங்கப்படும்.
அதைப்போல, தமிழ்நாடு அரசு காவலர் நல நிதிக்கு மானியத் தொகை ரூ. 10 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.