கலைஞரின் சட்டமன்ற உரைகள்
83
உரை : 5 : 5
நாள் : 03.04.1970
முன்
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் தலைவர் அவர்களே, இந்தப் பேரவையின் வைக்கப்பட்டுள்ள காவல்துறை மானியத்தின்மீது எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும், எல்லாக் கட்சியினுடைய உறுப்பினர்களும் தங்களுடைய மேலான கருத்துக்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே வந்த நேரத்தில், 'இறுதியாகத்தான் பேசப்போகிறீர்களா ?' என்று கேட்டேன். 'தான் பேசப் போவதில்லை'யென்று அவர்கள் குறிப்பிட்டார்கள். நானே அவரிடத்தில் 'மிக முக்கியமான மானியமாயிற்றே, நீங்கள் பேச வேண்டாமா?' என்று கேட்டேன். 'பேசுவதற்கு என்ன இருக்கிறது ?' என்று முதலிலே கூறிவிட்டு, என்னுடைய வேண்டுகோளுக்கிணங்கி, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே பேசினார்கள். முதலமைச்சர் அவர்கள் கொண்டுவருகிற மானியமாக இருக்கிற காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இறுதியாகப் பேசினார்கள். எனக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுப்பதுபோல் ஒரு வார்த்தையாவது சொல்வாரே என்பதற்காக நான் அவரைப் பேசுமாறு வேண்டிக்கொள்ளவும் அவரும் பேசினார்கள். முதலமைச்சர் அவர்கள் கொண்டுவருகிற போலீஸ் துறை மானியத்தில் கண்டிக்க விஷயங்கள் இல்லையென்று ஏற்கெனவே முடிவு செய்த காரணத்தினால், போலீசாருக்கு வசதிகள் அவசியம் என்று பெருந்தன்மையாக எடுத்துரைத்தார்கள். அவர் பேசிய பிறகுதான் புரிந்தது. நாம் ஏன் அவரைப் பேசச் சொன்னோம், பேசச் சொல்லாமலே இருந்திருக்கலாமே என்று. போன ஆண்டு இந்த மானியத்தின்மீது அவர் பேசியதை திரும்பப் படித்துவிட்டால் போதும். போன ஆண்டு சொன்ன அதே குற்றச்சாட்டுக்கள். போன ஆண்டு சொன்ன அதே கம்ப ராமாயணத்திலே வருகின்ற 'கள்ளர் இல்லையேல் காவலர் இல்லை கொள்வர் இல்லையேல் கொடுப்பார் இல்லை' என்ற உதாரணம். ..