102
ந
காவிரிப் பிரச்சினை மீது
முயற்சிகளை மேற்கொள்ளுவதற்கும், ஏற்கெனவே இருக்கின்ற ஆயக்கட்டுகளைப் பாழாக விடுவதற்கும் இடையிலே உள்ள வேறுபாட்டை நாம் உணரவேண்டும். இந்தக் கருத்தை மையமாக வைத்துத்தான் கடந்த 6, 7 ஆண்டுக்காலமாக தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களுடைய ஏகோபித்த குரலை மத்திய அரசின் முன் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நம்முடைய நண்பர் திரு. சுவாமிநாதன் அவர்கள் எடுத்துக் காட்டியதுபோல், அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களுடைய அரிய ஆலோசனைகளைப் பெற்று அந்த அடிப்படையில்தான் தமிழக அரசு பேச்சு வார்த்தைகளை, காவிரி நீரைப் பொறுத்தவரையிலே நடத்தி வருகின்றது. அந்தப் பேச்சுவார்த்தைக் கட்டங்களில் முக்கியமான கட்டங்கள் இறுதியான இரண்டு கட்டங்கள் ஆகும். இப்போது நடைபெற்ற, டெல்லி பேச்சுவார்த்தைக் கூட்டத்திற்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கொள்கையளவிலே பல பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆகவே அடுத்த கட்டத்தில் ஒப்பந்தம் நிறைவேறிவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தோம். ஆனால் அந்தக் கூட்டத்திற்கும் இப்போது டெல்லியிலே நடைபெற்ற கூட்டத்திற்கும் இடையில் கர்நாடக மாநிலத்திலிருந்து கிளப்பப்பட்ட பிரச்சினைகள், எதிர்ப்புகள் இவைகளெல்லாம் டெல்லியிலே அண்மையிலே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அனைவரும் சேர்ந்து அடையவிருந்த ஒரு நல்ல ஒப்பந்தத்திற்கு இடையூறாக மாறிவிட்டன
ஆகவே, அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இவ்வளவு முறைகள் நாம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும்கூட உரிய பயன்கிடைக்காத காரணத்தால் நடுவர் முடிவுக்கு விட வேண்டியிருக்கிறது என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைக்கு மாறான முடிவு வந்ததும் கர்நாடக அமைச்சர்களிலே சிலபேர் உச்சநீதிமன்றத்திற்கு ஏற்கெனவே போய்விட்டார்கள். அது முடிந்துபோன விஷயம் என்று குறிப்பிட்டதாக திரு. சுவாமிநாதன் குறிப்பிட்டார்கள். உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று நாம் வழக்காடத்தேவையில்லை. பேசியே தீர்த்துக்கொள்ளலாம் என்று நம் மத்திய அரசு உறுதியளித்ததன் காரணமாக நாம் போகவில்லை. ஆனால் நாம் அதை அறவே கைவிட்டுவிடவில்லை. எந்த நேரத்திலும் மீண்டும் நாம் வழக்கை நடத்திக் கொள்ளலாம். அடியோடு விட்டுவிடவில்லை. நாம் அதிலிருந்து பின்வாங்கிவிடவில்லை.