உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

காவிரிப் பிரச்சினை மீது

இப்படி ஒரு தவறான கருத்தைத் தயவுசெய்து சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். சில பத்திரிகைகள்கூட அப்படித் தவறாகத் தலையங்கம் எழுதியபோது அந்தப் பத்திரிகையாசிரியரோடு தொடர்பு கொண்டு ஒப்பந்தத்தைப் படித்துக்காட்டி 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எந்த வகையிலும் காலாவதியாகவில்லை என்பதை அவருக்கு எடுத்துக்கூறி இருக்கிறேன். காலாவதியாகிவிட்டது என்று சொல்வது நமக்கே கூட பாதகமாக முடியக்கூடிய ஒன்று. 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்றால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1974ஆம் ஆண்டு “சர்ப்ளஸ் வாட்டர்" என்று சொல்லப்படுகிற காவிரியில் வரக்கூடிய உபரித் தண்ணீரை எப்படிப் பகிர்ந்து கொள்வது என்பது பற்றிப் பேசி முடித்துக் கொள்ளலாம்; அந்தப் பேச்சுவார்த்தையிலே சுமூகமான ஒரு முடிவு ஏற்படாவிட்டால் பிறகு வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் "ட்ரிபியூனல்" அதாவது நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டும் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பேசிப் பேசிப் பார்த்து, முடியாத சூழ்நிலையில் நடுவர் தீர்ப்புக்கு விட வேண்டுமென்று இன்று தமிழக அரசு-தமிழகத்திலே உள்ள எல்லாக் கட்சியினுடைய தலைவர்களும்-கட்சிகள் அனைத்தும் வலியுறுத்திக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் மிக நன்றாக அறிவோம். 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியாகவில்லை என்பதற்காக நான் சொன்ன காரணங்களை மறுத்து திரு. வீரேந்திர பட்டீல் அவர்கள் சொல்லியிருக்கிற காரணம் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஆனபோது இருந்த மாநிலங்கள் வேறு; இன்றைக்கு இருக்கிற மாநிலங்கள் வேறு. அன்றைக்கு தமிழ்நாடு என்று இல்லை. சென்னை இராஜதானி என்று இருந்தது. ஆகவே, அதிலே கர்நாடகத்திலே சில பகுதிகள், கேரளத்திலே சில பகுதிகள் எல்லாம் இருந்தன. எனவே, அந்த ஒப்பந்தம் செல்லாது என்று திரு.வீரேந்திரபட்டீல் அவர்கள் சொல்கின்றார்கள்.

இரண்டு அரசுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவது என்பது நிர்வாகத்தினுடைய அடிப்படையிலேயே தவிர நிலப்பரப்பின் அடிப்படையிலே அல்ல. எனவே, நிலப்பரப்பைக் காரணமாக வைத்துக் கொண்டு அப்போது இருந்த நிலம் இப்போது இல்லை. அவைகள் எல்லாம் போய்விட்டன.