உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

காவிரிப் பிரச்சினை மீது

நம்முடைய அடிப்படை கருத்தெல்லாம் ஏற்கெனவே பயன்பட்டு வருகிற நம்முடைய தமிழகத்து ஆயக்கட்டுகள் பாழாகிவிடக்கூடாது என்பதுதான். நாம் நூறு டி.எம்.சி. தண்ணீரைக் குறைத்துக்கொள்கிறோம் என்று கூறியதன் பொருள் அதற்கான ஆயக்கட்டுப் பரப்பளவைக் குறைத்துக்கொள்கிறோம் என்பது அல்ல. இதை நாம் மிகத் தெளிவாக உணர்ந்துகொள்ள வேண்டும். சிலபேர் ஆயக்கட்டுகளைக் குறைத்துக்கொள்ளப் போகிறோமோ என்று தவறாகக் கருதுகிறார்கள் என்று நான் உணர்கிறேன். அது அல்ல உண்மை. இருக்கிற ஆயக்கட்டுகள் அப்படியே இருக்கும். இந்த 100 டி.எம்.சி.யைக் குறைத்துக் கொள்கிறோம் என்பது நம்முடைய பாசனக் கால்களை நவீனப்படுத்துவதன் மூலம் மாடர்னைசேஷன் ஸ்கீம் மூலம் -வாய்க்கால்களை நவீனப்படுத்தி, அதன்மூலம் தண்ணீரைச் சிக்கனப்படுத்தி இருக்கிற ஆயக்கட்டுகள் எல்லாவற்றுக்கும் தண்ணீர் அளிக்கலாம் என்கிற அடிப்படையில்தான் இந்த 100 டி.எம்.சி.யைக் குறைத்துக்கொள்ள ஒத்துக்கொள்கிறோம். அதுவும் உடனடியாக அல்ல. இன்றைக்கு ஒப்பந்தம் கையெழுத்தானால் நாளையதினமே 100 டி. எம். சி.யைக் குறைத்துக்கொள்கிறோம் என்று சொல்லவில்லை. இந்த 100 டி.எம்.சி. தண்ணீரையும் முற்றும் குறைத்துக் கொள்வதற்கு 15 ஆண்டுக்காலம் ஆகும். அந்த 15 ஆண்டுக் காலத்திற்குள் இந்த 100 டி.எம்.சி.யைக் குறைத்துக் கொள்வதனால் நம்முடைய இருக்கிற ஆயக்கட்டுகள் பாதிக்கப்படாதிருக்கக் கால்வாய்களை மாடர்னைசேஷன் ஸ்கீம் மூலம் நவீனப்படுத்தி தண்ணீரைச் சிக்கனப்படுத்திக் கொள்ளலாம் என்று கருதியே ஒத்துக் கொண்டோம்.

இருக்கிற ஒப்பந்தம் நிறைவேறவில்லை. நீங்கள் கொஞ்சம் பேரம் பேசியிருக்கவேண்டும். பிகு காட்டியிருக்க வேண்டும் என்பதாக பேரம் பேசுகின்ற முறைகளை டாக்டர் ஹாண்டே அவர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள். நான் வேடிக்கைக்குச் சொல்லவில்லை. தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

டாக்டர் எச். வி. ஹாண்டே : பேரம் பேசுகின்ற முறை என்றல்ல. நம்மைப்பொறுத்தவரையில் நமது ஆயக்கட்டுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சொன்னேன். நமது தேவைகளைத் தட்டிக் கேட்க வேண்டியது நமது கடமை என்பதை மறந்துவிடக்கூடாது.