பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 287 உலகியலில், ஒருவர், தமக்கு மிகவும் நெருக்கமானவர் இறந்துவிடின், இறந்தவரை ஒத்த மற்றையோரைப் பார்க்கும் போதெல்லாம், ஐயோ, இவர்கள் எல்லோரும் இருக்கின்றார்களே - நம்மவர்தான் இறந்து விட்டார் என எண்ணி நோவதுண்டு. அதே போல, சம்பாதியும், உலகில் எல்லாம் இருக்கும் போது என் தம்பி சடாயு மட்டும் இறந்து விட்டானே என வருந்துகிறான். சடாயு இறந்த வரலாறு வருந்திய சம்பாதியை அனுமன் ஆறுதல் மொழி கூறித் தேறுதல் செய்தான். பின் சம்பாதி, தன்தம்பி இறந்தது எவ்வாறு என வினவினான். அதுபற்றி அனுமன் கூறினான்: இராமன் மனைவி சீதையை இராவணன் தூக்கிச் சென்றான்-அறமே உருவான சடாயு அதனைக் கண்டு சீதையை விடுவிக்கச் சொன்னான். விடாததால் இருவரும் போர் புரிந்தனர், சடாயு இராவணனது தேரைக் குலைத்து அவனுடைய தோள்களையும் கிழித்தான். வெற்றுப் படைக் கலங்களால் சடாயுவை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இராவணன், தேவர்கட் கெல்லாம் தேவனான சிவன் தந்த வாளால் சடாயுவை வெட்டி உயிர் இழக்கச் செய்தான்-என்று அனுமன் கூறினான்: "சீறித் தீயவன் ஏறு தேரையும் கீறித் தோள்கள் கிழித்து அழித்தபின் தேறித் தேவர்கள் தேவன் தெய்வவாள் வீறப் பொன்றினன் மெய்ம்மையோன் என்றான்” (42) தேவர்கள் தேவன் = சிவன். வைணவ நூல் எனப்படும் இராமாயணநூலில், கம்பர் சிவனைத் தேவர்கள் தேவன் என்று கூறியிருப்பது நடுவுநிலைக்குச் சான்றாகும்.