பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


கி.பி.1550ம் ஆண்டுக்கு முன்னர், அந்தப் பகுதிகளின் சிறுவர்கள் ஒடியும், ஆடியும், ஆடுவதற்கு வசதியாகக் கிடைத்த இடங்களில் எல்லாம் ஆடிமகிழ்ந்திருந்தார்கள் என்று ஜான்டெரிக் என்பவர் எழுதியிருக்கின்றார்.

ஒரு சிலர் இக்கருத்தை மறுத்துரைத்தாலும், ஒவ்வொரு மாகாணத்தில் வசித்தவர்களும், இந்த கிரிக்கெட் விளையாட்டை அவரவர்க்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை அமைத்துக்கொண்டே விளையாடி வந்தனர். ஒருவர் பந்தை எறிவதும் மற்றொருவர் பந்தை மட்டையைக் கொண்டு அடித்து ஓட்டுவது என்பதும் தான் ஆட்டத்தின் அடிப்படைத் தத்துவமாக இருந்ததாம். அவர்கள் இந்தக் கருவை மையமாக வைத்து, வேண்டியவர்களுக்கு வேண்டிய வகையில் விதிகளை அமைத்துக் கொண்டு விளையாடி மகிழ்ந்தனர் என்பதற்கு எந்தவிதமான குழப்பமும் யாரிடையிலும் எழவே இல்லை.

பந்தயமும் பணக்காரர்களும்

பொழுது போக்குக்காக விளையாடிய கிராமத்தார்கள், தங்களுக்கு இடையே ஆட்டம் விறுவிறுப்பாகவும் உற்சாகமாகவும் அமைய வேண்டும் என்ற ஆசையில், பந்தயம் கட்டிக் கொண்டும் விளையாடி மகிழ்ந்திருக்கின்றனர். கிராமத்தில் உள்ளவர்களுக்குப் பணவசதி ஏது? அதனால் குறிப்பிடத் தக்கப் பந்தயத் தொகை அதிகமாக எதுவும் இல்லை. அவர்களுக்கு என்ன கிடைக்குமோ, கையில் இருக்குமோ அதையே பணயமாகக் கட்டி ஆடினார்கள்.

அவர்கள் கட்டிக் கொண்டு ஆடிய பந்தயப் பொருட்களின் பட்டியலைப் பாருங்கள். வெல்லும் ஆட்டக்காரர்களுக்கு அரைகிரௌன் நாணயம். ஆனால் பரிசுப்பொருட்கள் தான் அதிக அளவில் இருந்தன. அதுவும் ஆட்டக்காரர்களை மதித்து கௌரவிப்பதற்காகவே!