அகராதி ஆசிரியர்
79
மொழிச் சொற்கள் தமிழ் மொழியிலே சேர்ந்தன. அவ்விதம் சேர்ந்த சொற்கள் தமிழ்ச் சொற்கள் போலவே வழங்கி வருகின்றன. ஜன்னல் என்னும் சொல் வீடுதோறும் வழங்குகின்றது. ஆயினும் அது தமிழ்ச்சொல் லன்று. காலதர் என்ற சொல் முற்காலத்தில் வழங்கிற்று[1]. காற்று வரும் வழி என்பது அச்சொல்லின் பொருள், அது இக் காலத்தில் வழங்குவதில்லை. பலகணி என்பது மற்றொரு சொல். சாளரம் என்பது இன்னொரு சொல். இவையெல்லாம் இப்பொழுது பெரும்பாலும் மறைந்து விட்டன. ஜன்னல் என்ற போர்ச்சுகீசியச் சொல் நிலைத்து விட்டது.
ஜன்னல் போலவே சாவியும். வீடுதோறும் வழங்கும் சொல். பூட்டைத் திறப்பதற்குப் பயன் படும் கருவி சாவி யெனப்படும். முற்காலத்தில் திறவுகோல் என்பது அதன் பெயராக வழங்கிற்று. சேர நாட்டார் தாழ்க்கோல் என்று அதனை அழைத்தனர். தாழ் என்பது பூட்டு. எனவே தாழ்க்கோல் பூட்டைத் திறக்கும் கருவிக்குப் பெயராயிற்று. இப்போது அச்சொற்கள் பெரும்பாலும் பேச்சுத் தமிழினின்றும் போய்விட்டன. சாவி வந்துவிட்டது. சாவி என்பது தமிழன்று; போர்ச்சுகீசியம். இவ்வாறு பரங்கியரோடும் ஆங்கிலேயரோடும் கலந்து தமிழ் நாட்டார் ஏற்றுக் கொண்ட பதங்கள் நூற்றுக் கணக்கானவை [2]