பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

பழங்கதைகள் சொல்வதில் ஒர் மகிமை இல்லை என்றான் பாரதி.

புதிய கதைகள் புனைவதில் ஒரு பயன் உண்டு என்பது இங்குக் கண்டது; ஒரு புதிய உண்மை.

வாழும் மனிதர்க்கு எழும் பிரச்சனைகள் அவற்றிற்குத் தீர்வு காண்பது இந்தப் புதிய கதைகள்.

இன்றைய நடைமுறை நிகழ்ச்சிகளை வைத்துப் புனையப்பட்ட கதைகள் இவை. இவை எழுத்து ஒவியங்கள் அல்ல; செய்திகளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் தரப்பட்ட சொல்லோவியங்கள்.

கட்டுரை வெளிப் படையாகச் செய்திகளைச் சொல்வன. கதைகள் கவிதைகளைப் போன்றவை; ஒரே ஒரு செய்தியைச் சொல்வது. ஒவ்வொரு கதையும் ஒரே செய்தியைக் கூறுகிறது. நிகழ்ச்சிகளில் ஊடுருவிக் கண்ட உண்மைகள் அவற்றை உணர்த்த எடுத்துக் கொண்ட முயற்சிகள் இவை.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன் அவற்றைக் கூற அறிமுகம் தேவைப்படுகிறது. அறிமுகம், நிகழ்ச்சி, முடிவு இவை மூன்றும் கொண்டவை ஒவ்வொரு கதையும்.

ஒவ்வொரு கதையும் வாழ்க்கையின் அனுபவங்களை ஒட்டி அமைந்தவை; பாதிப்புகள் என்றும் கூறலாம்.

இவை தனி மனிதர் கதைகளைக் கூறுவன அல்ல; இப்பண்புகளைக் கொண்ட மாந்தர்களின் நிகழ்ச்சிகளைக் கூறுவன. அதனால் இவை இலக்கியத் தரம் பெறுகின்றன.