பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

எனும் பாவேந்தர் பாரதிதாசனின் பாடல், அடிகளாரின் நெஞ்சம் கவர்ந்த பாடல்களில் ஒன்று. புவியைப் பொதுவில் நடத்த வேண்டுமானால் வள்ளுவமே ஆட்சிமுறையாக வேண்டும் என்பதை அடிகளார் அழுத்தந் திருத்தமாகக் கூறிவந்துள்ளார். "குரு நானக்கின் சீக்கிய வேதம் இன்று பாஞ்சாலத்து மக்களை வழி நடத்தும் மறை; அந்தச் சட்டத்திற்கு முரணில்லாமல்தான் இந்திய அரசியல் சட்டம் செயற்பட வேண்டும். இது அவர்கள் பெற்ற வெற்றி. முகமதியர்கள் அத்தகைய வெற்றி பெற்றுள்ளார்கள். கிறித்துவர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள். ஆனால் தமிழ் மக்கள் இழிநிலையில் கற்பித்துக் கூறும் இந்து சட்டத்தின்படிதான் இன்று நடத்தப்பட்டு வருகிறார்கள். வள்ளுவத்தின் வழியில் அல்ல" என வள்ளுவர்வழி நம் ஆட்சிமுறை அமையவேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறார். இந்நூலில், அவர் கூறியுள்ள கருத்துகள் வள்ளுவ ஆட்சி முறையைத் தோற்றுவிக்கத் துணை செய்யும் எனும் துணிவோடு செயற்படுவோம்!

அடிகளாருடைய அனைத்து எழுத்துகளையும் ஒரு சேர ஒரே இடத்தில், ஒரே வேளையில் காணும் வகையில் பதிப்பிக்க முன்வந்துள்ள மணிவாசகர் பதிப்பக உரிமையாளர், பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் அவர்களைத் தமிழுலகு நன்றியுடன் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. மேலை நாட்டுப் பதிப்புகளைப் போல அடிகளாரின் நூல்களை அழகிய கட்டமைப்புடன் பேழையினுள்ளே தொகுதி-1, தொகுதி-2, - எனும் வரிசையில் காணுகின்ற வாய்ப்பினை உருவாக்கியுள்ள திரு. மெய்யப்பன் அவர்களை உளமாறப் போற்றி மகிழ்கிறேன்.

பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்கள் முனைவர் தெ. முருகசாமி, நா. சுப்பிரமணியம், குன்றக்குடி பெரியபெருமாள், மரு. பரமகுரு, க. கதிரேசன் ஆகியோர் நற்பணியாற்றியுள்ளனர். நிறைந்த பாராட்டுகள்.

மணி மாலையின் முதல் மணி - ஒளி பெறுவோம்! நலமடைவோம்!

அன்புடன்,

சு. செல்லப்பன்