பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 391


தடுத்து நிறுத்தப்பெற்று வெற்றிக்குரிய வழி துலங்கும். வாழ்க்கைப் போராட்டத்தில் அன்றாடம் கணக்குப் பார்க்க முடியாது. ஆனால், கணக்குப் பார்க்காமலும் இருக்கக்கூடாது. வாழ்க்கைப் போராட்டத்தில் கிடைக்கும் வெற்றிகள் கட்புலனுக்கு வாராமலும் இருக்கலாம். தத்துவ வளர்ச்சிகள் - சமூக மனமாற்றங்கள் உடனடியாக ‘பளிச்’ சென்று வரக்கூடியவையல்ல. உடனடியாகக் கட்புலனுக்குத் தெரியும் பயன்கள் நெடிய பயனைத் தராது போகலாம். ஏன்? தற்காலிக நலன்களைத் தந்து போர்க்குணத்தை மாற்றினாலும் மாற்றலாம். எப்பொழுதும் சமுதாயத்தை வருத்திக் கொண்டிருக்கும் பிற்போக்கு சத்திகள் அடிப்படை மாற்றத்தை ஒத்திப்போடுவதற்காகத் தற்காலிக நலன்களைத் தாராளமாக வழங்கும். புகழ்ச்சொற்களால் அர்ச்சித்துப் புகழ்ப்போதையில் மயக்கும். கண்ணயர்ந்தால் கையூட்டும் தரும். தயவு - தாட்சண்யங்களுக்குக் கட்டுப்படுத்தும். இந்தக் கட்டங்களிலெல்லாம் புகழ்ப்போதை வசப்படாமலும், மயங்காமலும் இடையில் நிற்காமலும், ஓயாமலும் வாழ்க்கைக் களத்தில் போராடுபவன்தான் இலட்சியச்சார்புடைய - பயனுடைய வாழ்க்கை வாழுகிறான். இல்லையெனில், ‘அவனும் வாழ்ந்தான்’ என்ற அவலப்பேச்சே எழும்.

வாழ்க்கையில், எரியும் மின்மினிப் பூச்சியைப்போல சிலருக்கு இலட்சிய வேட்கையிருக்கிறது. ஆனால், பொருள் காட்டா ஆற்றலற்ற விளக்கே போல, அந்த இலட்சியம் கனலாகப் பற்றி எரிவதில்லை. இத்தகையோர் இலட்சியங்களைப் பற்றிக் கனவும் காண்பர். நிறையக் கயிறு திரிப்பர். ஆனாலும், செயலிருக்காது. ஏனென்று கேட்டால் "அது ஓட்டை, இது ஓட்டை" என்று சந்தர்ப்பங்களின் மீது பழியைப் போடுவர். "காலம் நன்றாக இல்லை. கலியுகம் அல்லவா?” என்று அங்கலாய்ப்பர். "நல்ல ஆட்கள் இல்லை" என்பார்கள். "காசில்லை" என்பார்கள். இப்படிச் சார்புகளின்