பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

400 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



புத்தேள் நாட்டு இன்பம் என்றும் இன்பமாக இருப்பது. என்றும் இன்பமாக இருப்பதில் இன்பச் சுவை இருக்காது. பசிக்காது உண்போருக்கு பசியின் சுவையும் இல்லை; ஊணின் சுவையும் இல்லை. இத்தகையோர்க்கும் உடல் வாழ்க்கையும் சுவையாக இல்லாது சுமையாகவே இருக்கும். ஆதலால் புத்தேள் நாடு இன்பம் அன்று.

பிணங்கலில் இன்பங் காண்பதே இன்ப வாழ்க்கை! அன்பு வாழ்க்கை; காதல் வாழ்க்கை; நனி சிறந்த நல்வாழ்க்கை.

திருநீலகண்ட நாயனார் குடும்ப வாழ்க்கை இதற்கோர் எடுத்துக்காட்டு. திருநீலகண்டர் இளமையின் காரணமாக மனையறத்தில் வாழ்ந்தும், இன்பத்துறையில் எளியராகிப் பரத்தையின் பால் சென்றார். இதனையறிந்த திருநீலகண்டரின் மனைவி பிணங்கினார். பிணங்கி, "தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்” என்று ஆணை வைத்தார். ஆணை கேட்ட அடியவர் திருநீலகண்டர், இளமையின் காரணமாக எளியராய்ச் சென்றவராயிருந்தும் ஆணையின் காரணமாக மாதரை மனத்தாலும் நினையாத நோன்பு நெறிவாழ்க்கை மேற்கொண்டார். ஒரே வீட்டில் நாயனார் மனைவி, கணவனார்க்குரிய பணிவிடைகள் செய்தும், அயலவர் அறியாமல் புணர்ச்சியின்றி வேறு வேறாகப் பல ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள். ஆங்குப் பிணக்கு இருந்தது உண்மை. ஆனாலும் அந்தப் பிணக்கு பகையை வளர்க்கவில்லை. அந்தப் பிணக்கு பக்கத்து வீட்டுக்கும் தெரியவில்லை. பரமன் ஒருவனுக்கே தெரிந்தது. இப்பிணக்கு பேரன்பினை இழக்கச் செய்யவில்லை. பேரின்பத்தையே வழங்கியது. இத்தகு நெறியில் காதல் வாழ்க்கையும் நட்பு வாழ்க்கையும் சிறக்குமானால், எங்கும் இன்பம் பெருகும். இதனை,

     "புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
     நீரியைத் தன்னா ரகத்து (1323)

என்று குறள் கூறுகிறது.