பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 91


இரக்கம் வேண்டாம்" என்றும் கூறுகின்றார். ஏன்? "இரத்தலும் ஈதலே போலும்" என்றுகூடக் கூறிவிட்டார்.

இரவச்சம் அதிகாரத்தில்தான் இரவின் இழிவு பற்றிப் பேசுகின்றார். இரவச்சம் அதிகாரத்தில்,

"கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி யுறும்"
(1061)

என்று கூறுகின்றார். ஆனால் இரவு அதிகாரத்தில்,

"கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்று

இரப்புமோர் ஏஎர் உடைத்து"
(1053)

என்று கூறுகின்றார். இது என்ன? முன்னுக்குப்பின் முரணா? அல்லது இயல்பாய தேவைகளுக்கு அல்லது அறஞ்சார்ந்த வறுமைக்குத் தந்த விதிவிலக்கா? அறஞ்சார்ந்த வறுமைக்குத் தந்த விதிவிலக்கு அதிகாரமே இரவு.

மக்கட் சமுதாயம் இரந்து வாழும் நிலையில் வாழின், அந்த நாட்டில் அரசு இருந்து என்ன பயன்? கடவுட் கோயில்கள் இருந்து என்ன பயன் திருவள்ளுவருக்குக் கோபமே வருகிறது.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்"
(1062)

என்று பேசுகிறார்.

திருவள்ளுவர் நல்ல மக்கட் சமுதாயத்தைப் படைத்து உருவாக்கவே திருக்குறள் இயற்றினார். ஆயினும் அவரால் அது முடிந்ததா? முடியவில்லை என்பதே வரலாற்று முடிவு. அதுமட்டுமல்ல, திருக்குறளின் முடிவும் கூட ஏன் எனில், திருக்குறட் பொருட்பாலின் கடைசி அதிகாரம் கயமை. அரசு, நட்பு, பெரியோர், சால்புடையோர் இவ்வளவு பேர் முயன்றும் திருத்த முடியாத கயவர்கள் என்றும் சமுதாயத்தில் இருப்பர் என்று திருவள்ளுவர் நம்புகின்றார்.