பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

41


கண்ணப்பரின் அன்பினை அறிந்து அனுபவித்தற்குரிய கண் யாரிடமும் இல்லாது போயிற்று. ஏன்? காளத்தியப்பனுக்கும்கூட இல்லைபோலும்! கண்ணப்பரின் கண்ணையே ஏற்று அணிந்து கொள்வதன் மூலம், அன்பினைக்கான, அனுபவிக்க, காளத்தியப்பன் ஆர்வம் கொண்டான். ஆக, பக்தி என்பது சடங்கு மட்டுமன்று. அஃது ஓர் உயிர்ப்புள்ள ஊற்று உணர்வின் வெள்ளம், அருளின் ஆற்றுப் பெருக்கு. அந்தப் பக்திப் புனல் மனித நெஞ்சங்களில் ஊற்றெடுத்துப் பெருகுமானால் வஞ்சனையென்ற காட்டாறு வற்றும். பக்திப் புனலை வற்றாது காப்பது திருத்தொண்டு. அந்தப் பக்தி, புனலின் விளைவு தொண்டு. பக்தி, திருத்தொண்டினால் காப்பாற்றப்படுகிறது; வளர்க்கப்படுகிறது. பக்தியின் பயன் தொண்டு. திருத்தொண்டும், தொண்டும் இல்லையானால் பக்தியில்லை என்பதே பொருள். முடிவில்லாத தொடக்கம் இருந்து என்ன பயன்? இலக்கு இல்லாத பயணத்தால் யாது பயன்? பொருள் குறிக்காத சொல்லால் யாது பயன்? உயிர்ப்பில்லாத உடம்பினால் யாது பயன்: திருத்தொண்டும் தொண்டும் இல்லாத பக்தி இருத்தற்கில்லை; இருத்தல் இயலாது. அங்ஙனம் திருத்தொண்டும் தொண்டுமில்லாத பக்தி இருப்பதாகக் கூறுவது ஒரு பொய். நமது சமயம், அறிவிற் பழுத்துப் பக்தியில் கனிந்து திருத்தொண்டாகதொண்டாகப் பரிணமித்துப் பயன் தருவது. வாழும் உயிரின் இலட்சியம் திருத்தொண்டராதலே; பக்தி அதற்கொரு வாயில்.

திருத்தொண்டு என்பது எது? இறை பணி திருத் தொண்டு. இறை பணி என்பது இறைவனுக்காகச் செய்வதன்று. கற்பது அறிவுக்குச் செய்யும் பணியன்று நாம் அறிவைப் பெறுவதற்குரிய பணி. உண்பது உணவுக்குச் செய்யும் பணியன்று; நாம் உயிர் வாழச் செய்யும் பணி. ஆறுகளையும் குளங்களையும் பாதுகாப்பது அவற்றுக்குச் செய்யும் பணியன்று; நாம் வாழச் செய்து கொள்ளும் பணி.