பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முறை செயற்படும் பொழுது நமது சமயமும் ஒழுங்குபடுத்தப் பெறும்.

எது அருச்சனை?

சமயச் சீர்திருத்தங்களுள் ஒன்று தாய்மொழியில் அருச்சனை என்பது. பொதுவாக அருச்சனை முறையே, ஒருவருக்காக மற்றொருவர் செய்யும் முறை தோன்றிய பொழுது செல்வாக்குப் பெற்ற ஒன்று. அஃது அவ்வளவு சிறப்புடையதன்று. இறைவனை மலரிட்டுப் போற்றித் துதித்து வழிபடுதல்தான் நம்முடைய வழிபாட்டு முறை. தேவாரத் திருமுறைகளில் தற்கால அருச்சனை முறை இருந்ததில்லை. சங்ககால இலக்கியங்களிலும் இல்லை. அருச்சனை என்ற சொல்லும் வடமொழிச் சொல்லே. சேக்கிழார் அர்ச்சனை என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். ஆனால் அவர் குறிப்பிடுவது இன்றுள்ள அருச்சனை முறையையன்று. “அருச்சனை பாட்டேயாகும்” என்பது சேக்கிழார் வாக்கு. “பாட்டேயாகும்” என்ற சொல்லில் உள்ள தேற்றேகாரம் எண்ணத்தக்கது. சுந்தரர் காலத்தில் இன்றுள்ள அருச்சனை முறை பெருவழக்காக வந்திருக்க வேண்டும். இது அருச்சனை முறையன்று. நீ பாடிப் பரவுதலே அருச்சனையென்று பெருமான் சுந்தரருக்கு ஆணையிடுகின்றார்.

அற்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக............. [1]

என்பதுதான் தூமறை பாடும் வாயனாகிய பெருமானின் கட்டளை. ஆதலால் தேவாரத் திருமுறைகளைப் பாடித் துதித்தல் சிறந்த வழிபாட்டுமுறை. ஆயினும் இன்று கால் கொண்டுள்ள அருச்சனைமுறை அவ்வளவு எளிதில் போகாது; அது மட்டுமன்றி, விரும்புபவர்களுக்கும் இயலாத

  1. திருத்தொண்டர் புராணம், தடுத்தாட்கொண்ட புராணம், 70.