பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

79


நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஏன்? அவர்கள் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளக்கூட அவைகள் மறுத்தன; மறுத்துக் கொண்டிருக்கின்றன. ஆதலால் சமயத் தலைவர்கள் தம்முள் கலந்து முடிவெடுத்துச் சமுதாயத்தை வழி நடத்த முன் வரவேண்டும். அதுபோலவே தமிழகத்தில் நமது சமுதாய அமைப்பில் தோன்றும் திருக்கோயில்களையும் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். நம்முடைய வழிபடும் திருமேனிகளை, திருக்கோயில்களைச் சந்து பொந்துகளிலும் சாலை ஓரங்களிலும் சிலர் தம் பிழைப்புக்கருதி, மற்றவர் அலட்சியப்படுத்துமளவுக்கு அமைத்து விடுகிறார்கள். இதற்கு ஒரு நியதி இல்லை. அவற்றை முறைப்படுத்துவதற்குரிய நியதிகளையும் உருவாக்க வேண்டும். புதிய கோயில்களை எழுப்பச் சமய நிறுவனங்களின் தலைமையிடமாகிய பேரவையின் ஒப்புதல் பெறவேண்டும் என்ற வரன்முறை தேவை. சமுதாயப் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சமயப் பணிகளைச் செய்து சமயத்தைக் காக்கவேண்டும். அவ்வப்பொழுது சமுதாயத்தை உரியவாறு வழிநடத்த வேண்டும். இது இன்றைய உடனடியான தேவை. குடிகளைத் தழுவிய கோயில்; கோயிலைத் தழுவிய குடிகள்.

மீண்டும் நமது திருக்கோயில்களில் ஊர்ச் சபைகள் அமைய வேண்டும். அச்சபை சாதி, குல, இன, அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அமையவேண்டும். தன்னியல்பாகத் “தெரிதல் முறை”யில் அமையவேண்டும். அச்சபை திருக்கோயில் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டு செய்யவேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் வழிபடுவோர் பட்டியல் இருக்கவேண்டும். அந்தப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் அந்தந்தத் திருக்கோயில்களில் இறைவனை வழிபாடு செய்யவும், வழிவழித் திருத்தொண்டு செய்யவும்வேண்டும். நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஏதாவதொரு திருக்கோயிலில் தொண்டுரிமை கொண்டவர்