பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இருப்பர்; வலிமையற்றோரும் இருப்பர்; ஆனால் சமுதாயக் கட்டமைப்பிற்குள் கரைந்து வேறுபாடற்ற ஒன்றாக இருப்பது சமுதாய அமைப்பின் இலக்கணம். அப்படியானால் சமுதாயம் என்பது ஒரு அச்சுவார்ப்பா? இல்லை. அச்சுவார்ப்புக்கு உயிர்ப்பு ஏது? சிந்தனை ஏது: செயல் ஏது? உணர்வு எது? சமுதாயம் என்பது சிந்தனையும் செயல் திறனும் உடைய உணர்வுகளால் பொலிவடைந்து ஓயாது இயங்கும் ஓர் இயக்கம். ஆங்கு வேற்றுமைகள் இருக்கும். ஆனாலும் வேற்றுமைகளை ஒருமை, ஆட்கொண்டுவிட்டது. பொதுமை தனிமையை எடுத்துச் செரித்துக்கொண்டு விட்டது. ஆங்கு ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்று வாழ்கின்றனர். இத்தகைய சமுதாய அமைப்பே சமய வழிப்பட்ட சமுதாய அமைப்பு. சமயம் மனிதகுலத்தைச் சமைப்பது. “சேரவாரும் செகத்திரே” என்பது சமயத்தின் அழைப்பு! அப்பரடிகள் திருக்கோயில் உழவாரப் பணிமட்டும் செய்யவில்லை, “பார் வாழத் திருவிதிப் பணி"யும் செய்தார் என்பறிக சிவநெறியில் ஒரு வாழ்த்துப் பாடல் உண்டு. அந்தப் பாடல் கச்சியப்பர் அருளிச் செய்தது. அப்பாடலின் அமைப்பு முறையே, சமயம் ஒரு சமுதாய அமைப்பைப் பொதுநலம் செறிந்த சமுதாய அமைப்புப் படைக்கும் நோக்கும் உடையது என்பதை விளக்குவதாய் அமைந்திருக்கிறது.

“வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க!
நான்மறை அறங்க ளோங்க!
நற்றவம் வேள்வி மல்க!
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்!”

என்பது அந்தப் பாடல்.