பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமூகத்தில் புரையோடி வந்துள்ள தீண்டாமையை அறவே நீக்கவேண்டும். சாதி வேற்றுமைகள் முற்றாக அகற்றப்பட வேண்டும். சமூகத்தின் ஏழ்மையும், வறுமையும் அறவே அகற்றப்படவேண்டும். இந்து சமயம் மனித நேயத்தில் தோன்றி வளர்ந்தது. இன்று தேவை, மனிதகுல ஒருமைப்பாடே! அதுவே நாகரிகம்! மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிராக இயங்கும் “இந்து ஒற்றுமை” அவசியமா? அதுதான் உருவாகுமா? மனித குல ஒருமைப்பாடும், அமைதியும் இன்பமுமே மதங்களின் இலட்சியம்.

—"மக்கள் சிந்தனை” 1-4-82


கடவுளைப் போற்று
மனிதனை நினை!

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இவ்விரண்டு குறிக்கோளும் இருக்கவேண்டும். இவ்விரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையன. கடவுளைப் போற்றும் நெறியின் பயனே மனிதனை மதித்து வளர்ப்பதுதான்! மனிதனை “நடமாடுங் கோயில்” என்று திருமந்திரம் பாராட்டுகிறது. கடவுளைப் போற்றும் நெறி நிற்பவர்கள் மதத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பண்டைக் காலத்தில் மனிதனையும் மதித்தனர்; வாழ்வித்தனர். ஆனால் மதங்கள் காலப்போக்கில் கெட்டுப்போயின. மதத் தலைவர்கள், புரோகிதர்கள் ஆகியோர் ஆதிக்கவாதிகளாக-சுரண்டும் வர்க்கத்தினராக மாறினார். இந்த நிலை வளர்ந்தது.

“மக்களைவிட மதம் உயர்ந்தது. கடவுளுக்காகவே மக்கள். மதத் தலைவர்கள் மிகமிக உயர்ந்தவர்கள். இவர்களை வணங்குவதும் இவர்களுக்குக் காணிக்கை செலுத்துவதும் புண்ணியம்” என்ற கருத்துக்கள் கால்கொண்டன. இந்த நிலையில் சுரண்டும் இதர வர்க்கங்களும் ஆதிக்க சக்திகளும்