பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளும் முயற்சியில் வன்சொல் தோன்றுகிறது. அடுத்து, வன்சொல் தோன்றும் களம் ஏமாற்றங்களும் தோல்விகளுமாகும். அழுக்காற்றின் காரணமாகவும் வன்சொல் தோன்றும். இந்தக் களங்களில் தோன்றிய வன்சொற்கள் யாதொரு பயனையும் தந்ததில்லை. மாறாக எதிர்விளைவையே உண்டாக்கியுள்ளன என்பதே வரலாற்று உண்மை. அது மட்டுமல்ல, கருத்து வளர்ச்சியும் மாற்றங்களும்கூட வன்சொல் வழங்குவதின் மூலம் தடைப்படுகின்றன. நிலம் செப்பமாக இல்லாதபோழ்து விதைத்து என்ன பயன்? முளைக்காது. கேட்பார் மனம் செப்பமாக இருக்கத்தக்க வகையில் இன்சொற்களைக் கூறாது போனால் பயன் கிடைக்குமா? மற்றவர் கூறிய இனிய சொற்கள் இன்பம் விளைவித்திருப்பதைச் சென்றகால வரலாற்றிலும் காண முடிகிறது. நிகழ்கால வரலாற்றிலும் காண்கிறோம். இன்சொல் இன்பத்தைத் தருகிறது. பழகும் இனிய நட்பினைத் தரும் இத்தகு மேம்பட்ட பயன்களை இன்சொல் அளிப்பதை அறிந்திருந்தும் ஏன் வன்சொல் வழங்குகிறீர்கள்? வன்சொல், வாளினும் கொடிது, நாவினால் வன்சொல் கூறிச் சுடுவது தவறு. வன்சொல் இன்ப அன்பிற்குப் பகை அறத்திற்கு முரண். வன்சொல் அமைதியைக் கெடுத்திடும். வன்சொல் வழங்கற்க! இன்சொல்லைச் சொல்லிடுக!

வன்சொல், சிறுமை பொருந்தியது. இன்சொல் பெருமையோடு தொடர்புடையது. வன்சொல் இம்மையையும் கெடுக்கும்; மறுமையையும் கெடுக்கும். நன்றைத் தரும் இன்சொல் கூறிப் பழகுக! இன்சொல்லை அணியெனப் பற்றுக!

22–3–1987