பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காணோம்; பிழைப்பு நடத்துகின்றவர்களையே பார்க்கின்றோம். மனிதகுலத்தின் இந்த நிலை அறியாமையின் விளைவு. “வாழ்க்கை துன்பமானது; வாழ்க்கை யாராலேயோ அமைக்கப்படுகிறது. இது இப்படித்தான் இருக்கும்” என்றெல்லாம் கூறும் அறியாமையிலிருந்து மக்களை மீட்கவேண்டும். “வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்வாங்கு வாழ்வதற்கே!” என்ற அறிவியல் சார்ந்த விழிப்புணர்வைத்தர வேண்டும். வறுமை, துன்பம், அவமானம் ஆகியவற்றோடு ஒன்றிப் பழகிப்போய் - இவையெல்லாம் இயற்கையென்றும், விதியின் விளைவு என்றும், இறைவனின் ஏற்பாடு என்றும், மாற்றமுடியாத ஏற்பாடு என்றும் நினைத்துக் கொண்டு இழிவினை எதிர்த்துப் போராட உந்துதலும் திறனுமின்றி வாழும் மக்களிடத்தில் பொய்ம்மைச் சாத்திரங்களைத் தோலுரித்துக் காட்டி விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். அவர்களிடம் போர்க்குணத்தினை உண்டாக்கிட வேண்டும்.

அறியாமையைப் போலவே இரக்கம் காட்டுதல், தானம் தருதல், இலவச வாழ்க்கை வழங்குதல் ஆகியவையும் மனிதகுலத்திற்குத் தீமையையே தரும். வாழப் பிறந்த மனிதனுக்குக் கல்வியும். தொழிற்நுட்பக் கல்வியும் இயல்பாகவே பெற உரிமை உண்டு. இது சமுதாய, அரசியல் அடிப்படையிலான உரிமை ஆகும். அந்த உரிமையை எந்தவிதமான வேறுபாடும் காட்டாமல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்விக்குக் கட்டணம் என்பது கூடாது! கூடாது! கல்விக்கு கட்டணம் என்ற நிலை நீடித்தால் மானுடத்தின் பிறப்புரிமையைப் பறிப்பது போல ஆகும்; செயற்கை வழியதாகிய ஏற்றத்தாழ்வுகளை நிலைப்படுத்துவதும் ஆகும்; மானிடத்தின் இயல்பே கெட்டுவிடும்.

அடுத்து, உழைத்து உண்பது உயிரியற்கை உழைப்புக்கே மானிடப்பிறப்பு. உழைத்து வாழ்தலே இயற்கையான வாழ்வு; இறைமை சார்ந்த வாழ்வு. உழைக்காதவர்க்கு உண்ண உரிமை இல்லை. இதுவே புதிய அறம். உழைப்பிற்குரிய களங்களைச்