பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது

365




நிகழ்கின்றன. சரக்குப் பேருந்து வண்டியும் (லாரி) மனிதச் சுற்றுலாச் சுற்றுந்து வண்டியும் (பிளசர்) மோதிக் கொள்கின்றன. அவை மோதிக் கொள்வதற்குக் காரணம் அவ்வண்டிகள் அல்ல; அவற்றைச் செலுத்தும் வலவர்களின் திறமையின்மை, அல்லது கவனக் குறைவு ஆகியவையேயாம். அது போலவே மனித உலகத்தில் ஏற்படும் பிணக்கு, பகை, போர் முதலியவைகட்கு ‘மனிதர்களிடையே நிலவும் மக்கள் நிலைக்கு வேண்டிய தகுதியின்மையே காரணமாகும். மனிதர்களின் உள்ளுணர்வுகளைச் சமைத்துப் பக்குவப் படுத்தும் உயரிய வாழ்க்கை முறையே சமயம். பச்சையாகச் சுவைத்து நுகர்தற்கு உரியனவாக இல்லாத பொருள்களைச் சுவைத்தற்குரியனவாகப் பக்குவப்படுத்தும் வினையைச் சமைத்தல் என்று கூறுவது தமிழ் மரபு. இன்ப நுகர்வுக்குரிய கன்னிமைப் பருவத்தை ஒரு பெண் எய்தினாள் என்பதற்கும் “சமையல்” என்று கூறுதல் தொன்று தொட்டுள்ள தமிழ் வழக்கு. அதுபோலவே உயிரும் இன்ப அன்பினை நுகர்தற்குரிய நிலையினை எய்துதற்குப் பக்குவப்படுத்துவதே சமயம்.

இந்தச் சமயவாழ்க்கையில் இன்று மனித உலகம் போதிய அக்கறை காட்டவில்லை. ஒரோவழி காட்டப் பெறும் இடத்திலும்கூட வெற்று ஆரவாரச் சடங்குகள்மீது அக்கறை காட்டப் பெறுகிறதேயொழிய, உண்மையான சமய வாழ்க்கையில் அக்கறை காட்டப் பெறவில்லை. மனித உலகம் “வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்” என்ற சமய நெறியின் வழி நின்று ஒழுகினால் மட்டுமே இன்பமும் அமைதியும் கலந்த சீரிய வாழ்க்கை மலரும்.

சமய ஒருமை

இந்நிலவுலகம் அளவிடப் பெறாத அகற்சியையுடையது. உலகின்கண் பல்வேறு மொழிகள் பேசப் பெறுகின்றன; அதுபோலவே பல்வேறு சமயங்களும்