பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருள்

407


விழுமியது என்றெல்லாம் எண்ணுவார்; எழுதுவார்; மற்றவைகளைப் பொய் என்றும் பயனற்றவை என்றும் வெறுத்து ஒதுக்குவதுடன் அந்தச் சார்புகளைச் சார்ந்து வாழ்பவர்களிடமும் பகைமை உணர்ச்சியை வளர்ப்பர். இதுதான் சார்பின் இலக்கணம். சமயச் சார்பற்ற தன்மை என்பது ஒருவர் தாம் பிறந்து வளர்ந்த சமயத்தினைப் பின்பற்றல்; ஆர்வத்துடன் பேணல், நின்றொழுகுதல். அதே போழ்து பிறசமய மறைகளை விருப்பத்துடன் கற்றல். பிற சமயங்களை மதித்தல். அந்தச் சமயங்களைச் சார்ந்த மக்களைச் சகோதரர்களாக ஏற்று அன்பு பாராட்டுதல். உறவுகளைச் செழுமைப் படுத்திக் கொள்ளுதல் முதலியன சமயச் சார்பற்றோரின் வாழ்க்கை முறை. ஒரோவழி மதங்களிடையே மாறுபாடுகள் தோன்றினால் மதங்களை-மதக் கோட்பாடுகளைப் பின் தள்ளிவிட்டு ஒரே கடவுள்-ஒரே குலம் ஆகியனவற்றை மையமாகக் கொண்ட கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தல் சமயச் சார்பற்றோரின் தன்மை.

இந்து சமயம் இயல்பாகவே சமயச் சார்பற்ற தன்மையுடையது. இந்து மதத்தில் எந்த ஒரு கொள்கையும் கோட்பாடும் கட்டாயமாக்கப் பெறவில்லை. அவரவர் விருப்பம் போல மேற்கொண்டொழுகலாம். ஒரே இஸ்லாமியர், இஸ்லாமியத்திலிருந்து மாறாமல் வாழ்ந்து கொண்டே நான் ஒரு இந்து என்றால் யாராலும் இதை மறுக்க முடியாது. கடவுள் ஒருவர்; அவர் அருவம்; உருவம். அவரை எந்தப் பெயர் கொண்டும் அழைக்கலாம். எப்படியும் வழிபடலாம். இந்த நெறிமுறைகள் சார்பற்ற தன்மையைச் சார்ந்தவையல்லவா? இந்தியாவில் முதன் முதலில் சமயச் சார்பற்ற தன்மையை மேற்கொண்டு அறிவித்தவர் மாணிக்கவாசகர்.

“தென்னா டுடைய சிவனே போற்றி!
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி"!