பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சண்டீசபதம் அருளும் காட்சி மிகச் சிறந்த அழகிய சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ளது. அடுத்து நம்முடைய கவனத்தைக் கவரும் சிறந்த சிற்பங்கள் உடைய திருக்கோயில், தாராசுரத்திலுள்ள இராசராசேசுவரம் என்ற திருக்கோயில், இந்தத் திருக்கோயிலில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு முழுவதும் சிற்பமாகச் செதுக்கப் பெற்றுள்ள காட்சி, காண்பார் உள்ளத்தைக் கவரும் காட்சி. இங்ஙனம் தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் அமைந்துள்ள சிற்பங்கள், கலைகளின் கருவூலமாக மட்டுமல்லாமல், தமிழக வரலாற்றைப் பாதுகாத்து, அந்தப் பழமையான வரலாற்றுச் செய்திகளைப் புத்துணர்வோடு மக்கள் அனுபவிக்கத்தக்க வகையில் படைத்துத் தந்துள்ள பெருமையை என்னென்று புகழ்வது!

தமிழகத் திருக்கோயிற் சிற்பங்கள் பல திறத்தன. இச்சிற்பங்களைச் சாதாரண உருவங்களாகக் கருதுதல் கூடாது. கலையுணர்வில் ஆவேசித்து நின்ற ஒரு கலைஞன், அர்ப்பணிப்பு உணர்வுடன் தன்னை மறந்து இந்தச் சிற்பங்களைச் செதுக்குகின்றான். சிற்பக் கலைஞன் வாழும் உலகம் வேறு; அவனுடைய மனோ நிலையும் வேறு. சாதாரணமாக-சராசரி வாழ்க்கைத் தரத்தைக் கூட உயர்த்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய சிற்பங்களை அனுபவிக்கவும் விமர்சிக்கவும் இயலாது. பொதுவாகச் சமய உலகில் ஆண், பெண் என்ற வேறுபாட்டின் காரணமாக உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை; கவர்ச்சியும் இல்லை. காதல் வாழ்க்கை தவிர்க்க இயலாத ஓர் இயற்கை நியதி. எனவே, இவ்வகையான சிற்பங்களில் பெண்பால் உருவங்களைப் பார்க்கும்பொழுது சிலர் அதனைக் கொச்சையானது என்று நினைக்கின்றனர், பேசுகின்றனர். அந்த உருவத்தைச் செதுக்கிய சிற்பி, கலை உபாசனா முறையில் பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நின்றே வடித்துக் கொடுத்துள்ளான். அந்தக் கலைஞனின் உணர்வுப் போக்கிலேயே அவற்றை அனுபவிக்க வேண்டும்.