பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


குன்றக்குடி கிராமம் அடிகளாரால் மாதிரி கிராமமாக ஆயிற்று. குன்றக்குடி பேட்டர்ன் என்று அகில இந்தியப் புகழைப் பெற்றது. அடிகளாரே ஒரு மாதிரி மடாதிபதியாக விளங்கினார். குன்றக்குடி அடிகளார் பேட்டர்ன் மடாதிபதிகள் இன்றைய நாட்டுக்குத் தேவை.

"வாக்கும் வாழ்வும்" என்ற தலைப்பில் அடிகளார் கட்டுரை ஒன்று இந்நூலில் உள்ளது (பக்கம் 36). வாக்கும் வாழ்வும் என்றால் என்ன பொருள்? வள்ளலார் வாழ்வும் வாக்கும், காந்தியடிகள் வாழ்வும் வாக்கும், பாரதியார் வாழ்வும் வாக்கும் என்ற தலைப்பில் நூல்களைக் காண்கிறோம். இங்கெல்லாம் வாக்கு என்பது வாய்மொழி. ஆனால் அடிகளார் கட்டுரை “வாக்கும் வாழ்வும்" என்பதில் வாக்கு என்பது வாக்குரிமை, ஓட்டு (VOTE). வாக்களிப்பதில்தான் வாழ்வே இருக்கிறது என்கிறார் அடிகளார். மக்கள் நல்வாழ்வு வேண்டின் வாக்குரிமையை நன்முறையில் பயன்படுத்தவேண்டும். "வாக்கும் வாழ்வும்" என்ற தலைப்பில் அடிகளார் வாக்காளர்களை நோக்கிக் கூறுவது வருமாறு: "வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு முன்பு தெளிந்த சிந்தனையோடு சிந்திக்கவேண்டும். தேர்தலுக்கும் உணர்ச்சிக்கும் நெடுந்தொலைவு. எழுத்தால் பேச்சால் எடுத்துக்காட்டுகளால் வாக்காளர்களை உணர்ச்சிவசப்படுத்தி, அந்த உணர்ச்சியில் வாக்காளர்கள் மயங்கிக் கிடக்கும்போது, வாக்குகளைப் பெற முயற்சிப்பார்கள். தேர்தல் மேடைகளில் பேசுகிறவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். ஆனால் கேட்கின்ற வாக்காளர்கள் உணர்ச்சி வசப்படக்கூடாது. உணர்ச்சி வசப்படுத்தி வாக்குரிமை யைப் பறிப்பது ஒரு வழிப்பறி போன்றதே. வாக்குரிமையைப் பயன்படுத்துவதில் தெளிந்த - அறிவின் வயப்பட்ட சிந்தனைக்கு இடங் கொடுக்கவேண்டும் (பக்கம் 38, 39). அடிகளார் கூறும் வாக்கும் வழிப்பறிதானே இப்போது பெரும்பாலும் நடைபெறுகிறது.


அடிகளார் ஆத்திகர். பெரியார் நாத்திகர். ஆத்திக அடிகளாரும் நாத்திகப் பெரியாரும் ஒருவரோடொருவர் பழகினர். ஒருவரை ஒருவ்ர் பாராட்டினர். இருவரும் இணைந்து சில பல தொண்டுகளைச் செய்தனர். இருவருமே தத்தம் அடிப்படைக் கொள்கையைவிட்டுக் கொடுத்துவிடவில்லை. ஏற்ற அளவு ஏற்ற வழியில் இணைந்து தொண்டாற்றினர். கூடா நட்பு என்று முதலிற் கூறப்பட்டாலும் பின்வு வரவர சரியாய்ப் போயிற்று.