பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

249


இந்தச் சிக்கலைத் தவிர்க்க இந்தி பேசாத மாநில மக்களுக்குத் தேர்வு எண்களில் ஏதாவது சலுகை வேண்டாமா? இந்தி மொழிச் சட்டத்தால் பாதிக்கக்கூடும் என்று கருதப்பெறும் இனங்களுக்கு உத்தியோகங்களில் ஒதுக்கிடு வேண்டாமா? இந்தி பேசாத மாநில மக்களின் கருத்தறிவதற்கு 10 ஆண்டுகள் எல்லைக் கோடு வைத்து வரையறுத்துப் பரிசீலனை செய்வதன் மூலம் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. இந்தி பேசாத மாநில மக்கள் இந்தியில் குறைந்தது 75 விழுக்காடாவது பயிற்சி பெறுகிற வரையில், ஆங்கிலம் நீடிக்கும் என்று சொல்லிவிட்டுப் போகலாமே. 10 ஆண்டுகள் கழித்து ஒரு குழு அமைத்து அக்குழு ஆராய்வது என்றால் அக்குழுவில் யார் இருப்பது என்பதும் சிக்கல்.,

இந்தி பேசாத மாநிலத்தின் சார்பாளர்களே அதிகமாக அந்தக் குழுவில் இருந்தாலும்கூட அவர்கள், நாட்டுமக்களின் உள்ளெண்ணத்தைச் சரியான முறையில் பிரதிபலிப்பார்கள் என்பது என்ன உறுதி? அவர்கள் பெரிய பதவிகளை எதிர்பார்த்து "ஆமாம்சாமி" போடுகிறவர்களாகி விட்டால் நிலைமை என்னாவது? ஆதலால், பொதுவாக இந்தி ஆட்சி மொழிச் சட்டம் குறைகளும் நிறைகளும் கலந்ததாகவே இருக்கிறது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருக்கட்டும். ஆனால் இந்தி மட்டும் இருக்கக் கூடாது. இந்தியாவின் வட்டார தேசிய மொழிகளையும் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை அரசு சொல்லுகிற அளவிற்காவது இந்திய ஆட்சித் துறையில் வட்டார தேசிய மொழிகள் நியாயமான அளவிற்கு உபயோகிக்கப்படும் என்ற கொள்கையாவது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த முடிவை இந்திய அரசு ஏற்குமானால் இந்தியா வலிமை மிகுந்த ஒரு பெரு நாடாகத் தொடர்ந்து விளங்கும்.