பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

337


அமைந்து விளங்குகின்றதோ அந்தச் சூழ்நிலையில் வாழும் பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் சமூகம். சிறந்த சமூக அமைப்பில் தனி மனிதன் அமைதியாக வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியும். ஒவ்வொரு மனிதனும் தோழமையுடன் பழகுவதற்குரிய சமூக உறவுகள் எளிதாகக் கிடைக்கும்.

இத்தகு சமூகத்தில் ஒரு பிணைப்பு இருக்கும். ஒத்த கருத்திற்கும் ஒத்துழைப்பு இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் 'நாம்' என்ற உணர்வே விளங்கித் தோன்றும். பொதுவாக, சமூக இயக்கத்திற்குத் தனது இருப்பும் உழைப்பும் இன்றியமையாதன என்ற எண்ணமும்தான் சமூகத்தைச் சார்ந்து வாழ்கிறோம், என்ற உண்மையும் தன்முனைப்பு மழுங்கிய அடக்க மனப்பான்மையும் காணப்பெறும். இத்தகு சிறந்த சமூகப் பண்புகள் நிறைந்த சமூகமாகப் பண்டைய கிராம சமூகம் அமைந்திருந்தது. இன்றைய கிராமங்களில் இத்தகு சிறந்த சமூகப் பண்புகளைக் காண இயலவில்லை. 'சமூகமே' மறைந்து சாதிகள் தோன்றி, "சாதிகளே சமூகம்" என்ற பெயரைப்பெற்று விட்டன. இன்றைய கிராமங்களில் நிறைய வேற்றுமைகள்! சமச் சீர்மை இல்லாத சமூகம் சுரண்டப்படும் வர்க்கத்திற்கு இரையாகி ஏழ்மையும் வறுமையுமுற்றுத் தாழ்நிலையில் வாழ்வதே இன்றைய கிராம மக்களின் வாழ்நிலை.

கிராமங்களின் நிலை

இந்தியா கிராமங்கள் நிறைந்த நாடு. இந்திய நாட்டில் 5,57,137 கிராமங்கள் உள்ளன. தமிழ் நாட்டில் 16,812 கிராமங்கள் உள்ளன. கிராமங்களிலேயே செல்வக் களஞ்சியங்களாகிய நிலமும் நீரும் இயல்பாகவே அமைந்துள்ளன. இந்தியக் கிராமங்களில் வாழும் மக்கள் தொகை 50,76,07,678 தமிழ்நாட்டுக் கிராமங்களில் வாழும் மக்கள் தொகை 3,24,56,802, தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் வாழும் மக்களே மிகுதி. நகரங்களில் வாழ்வோருக்கும் படித்தவர்