பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

383


உறவு பாலியல் உறவு மட்டுமல்ல. பாலியல் உறவு வாழ்க்கையின் ஒரு பகுதி. கணவனும் மனைவியும் பொருள் ஈட்டுதல், பாதுகாத்தல், முறையாக - சிக்கனமாகச் செலவு செய்தல் ஆகிய பொருளாதாரக் கடமைகளைக் கலந்து செய்தல் வேண்டும். நல்ல நூல்களைக் கூடியிருந்து படித்தல், படித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல் மூலம் அறிவையும் திறனையும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்; நலத்துறைகள் அனைத்திலும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் பாதுகாப்பதில் அக்கறையும் காட்ட வேண்டும். நாட்டுக்கு அணி நலம் செய்யும் நல்ல பிள்ளைக்கு பெற்றோர்களாக வேண்டும். ஆண்டு பலவாக நரையும் மூப்புமின்றி வாழ முடியும். எப்போது? வீட்டில் மாட்சிமைக்குரிய மனைவியும் குழந்தைகளும் இருந்தால் முடியும் என்று பிசிராந்தையார் கூறுகின்றார். அறநெறிப்பட்டதே இல்வாழ்க்கையென்பது திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறி.

மக்கள் கூடி வாழப் பிறந்தவர்கள். குடும்பம், சுற்றம், விருந்தினர் என்ற படிமுறையில் வளர்ந்து சமுதாயமாக உருப்பெறுகிறது. இந்தியாவில் இன்னமும் இயல்பாக உருவாகவேண்டிய சமுதாயம் உருவாகவில்லை. ஏன்? இந்த நாட்டில் ஜாதி வேற்றுமைகளும், மத வேற்றுமைகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், பதவி, சுரண்டல், ஆசை காரணமாக நாள்தோறும் காளான்களைப் போலத் தோன்றும் அரசியற் கட்சிகளும் இந்தியாவில் சமுதாயம் உருவாகத் தடையாக உள்ளன. இந்தத் தடைகளை எதிர்த்துப் போராடினால்தான் இந்தச் சமூகத் தீமைகள் அறவே அகன்றால்தான் இந்திய சமுதாயம் உருவாகும்.


"எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் இனம்
எல்லாரும் இந்திய மக்கள்"

என்ற நிலை உருவாகும்.