பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

444

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைப்பில் சமுக உறவுகள் எப்படி இருந்தால் நல்லது என்று ஆராய்ந்து அறிந்து ஒழுகுவதே நல்லது. அறிவுடைமையும் கூட!

சொத்துடைமை காரணமாக எவரும் உழைப்பைத் தவிர்த்தல் கூடாது. உழைப்பது உடைமைக்கு ஆக்கம் தரும். உடல் நலத்தினைத் தரும். எல்லாரும் உழைப்பில் ஈடுபட்டு வாழ்ந்தால் உறவுகள் வளர வாய்ப்புண்டு. எல்லாரும் உழைக்கின்றோம் என்கிற மன அமைதியில் உறவு நிலை நன்றாக அமையும். அதுபோலவே நுகர்வுகளிலும் உள்ள வேறுபாட்டின் இடைவெளி குறைய வேண்டும். நுகர்வுகளில் ஏற்படும் இடைவெளியே சமூகத் தீமைகளுக்கெல்லாம் காரணம். ஒருவன் உடுப்பதிலும் உண்பதிலும் காட்டப்படும் எளிமை சமநிலை உறவுகளை வளர்க்கும்; பாதுகாக்கும். சொத்துடைமை; பொருளுடைமை என்பது பலவீனமான மனிதர்களைக் கெடுக்கும் தன்மை உடையது. அதாவது, கெட்டபழக்கங்கள் கால்கொள்ளும். இந்தச் சூழ்நிலையில் மனிதன் விழிப்பு நிலையில் இருந்து பாதுகாத்துக் கொண்டால் உறவுகள் வளரும்; சொத்தும் பாதுகாப்பாக இருக்கும்.

சொத்தும் பொருளும் இனந்தெரியாத அகங்காரத்தைத் தோற்றுவிக்கும்; தன் முனைப்பைத் தரும். அதனாலன்றோ திருக்குறள்.

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.”

–குறள் 125

என்று கூறியது. ஆதலால், சொத்து – பொருளுடைமை காரணமாக ஆரவாரமாக நடக்காமல் – ஆடம்பரமாகத் திரியாமல் அடக்கத்துடனும் எளிமையுடனும் வாழ்ந்தால் சமூக உறவுகள் இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் சமூக உறவுகள் பாதிக்காது. சொத்துடைமையும் பொருளுடைமையும் சமூக வாழ்க்கையைப் பராமரிப்பதற்காகத்தானே! ஆதலால் சொத்துடைமையின் பயன்களை எல்லாரும் அடையக் கூடிய நிலையில் குறிப்பாக வறுமையும் ஏழ்மையும்