பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

456

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்! நாற்றங்காலில் நாற்று வளரும் ! பருவம் வந்தவுடன் பறித்துக் கழனியில் நடப்பெறும். அந்த நாற்று பயிராகக் கழனியில்தான் வளர வேண்டும். கதிர் ஈன வேண்டும். கழனி பிடிக்கவில்லை என்று, திரும்ப நாற்றங்காலுக்கும் நாற்றுப் பயிர் வர இயலுமா! அது போலத்தான் பெண்! பெண்ணுக்குப் பிறந்த வீடு நாற்றங்கால்! திருமணம் செய்து கொண்டு புகும் வீடு கழனி. அப்பரடிகளும் தேவாரத்தில் “அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை” “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!” என்றார். ஆதலால் நீ மனைவியாகச் செல்லும் வீடு, ஊர் இவற்றின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழக் கற்றுக்கொள்! பழகிக்கொள்! நாம் இங்ஙனம் கூறுவது ஒத்துப்போவதற்குரியது.

திருமணத்திற்குப் பிறகு இயல்பாகவே கணவனுக்கும் சரி, மனைவிக்கும் சரி பழக்கங்கள் மாறும்! இஃது இயற்கை! ஆம்! தம்முள் மாறி அன்பு காட்டுவதால் சுவை முதலியன கணவனுக்கு மனைவியைச் சார்ந்தும் மனைவிக்குக் கணவனைச் சார்ந்தும் ஏற்படுகின்றன. ஆதலால் கணவன் உவப்பனவற்றை உவந்து ஏற்றுக்கொள்! கணவனின் சுற்றத்தை உன் சுற்றமாக ஏற்றுக் கொள்! தமிழ் மரபில் சுற்றம் பேணல், குடி செயல் போன்ற அறங்கள் இல்லறத்தார் செய்ய வேண்டியவை. அந்த அறங்களை உன் கணவன் செய்வதற்குத் துணையாக இரு. குடும்பத்தின் சூழலில் அமைதி நிலவினால்தான் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். ஆதலால், எந்தச் சூழ்நிலையிலும் குடும்பத்தின் அமைதியைப் பாதுகாத்துக் கொள்ளத் தவறிவிடாதே!

நீ, படித்த பெண். உனக்கு அதிகம் எழுத வேண்டுமா என்ன? நீ கணவன் வீட்டுக்குப் போகும் பொழுது திருக்குறளை எடுத்துக் கொண்டு போ! அடிக்கடி திருக்குறளைப் படி! திருக்குறள் காட்டும் நெறியில் வளர்க! வாழ்க!

திருக்குறள், குடும்பத் தலைவியை “வாழ்க்கைத் துணை நலம்” என்று போற்றுகிறது. தலைவனுக்குத் தலைவி