பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

461


வரலாறு நுட்பமானது. மனைவியின் ஆணையை ஏற்றுக்கொண்டு மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து இல்லறக் கடமைகளில் வழுவாமல் வாழ்ந்துள்ளார். ஆயினும் புணர்ச்சி இல்லை. இந்த அற்புறு புணர்ச்சியின்மை அயலவருக்குத் தெரியாது சொற்காக்கும் கற்புடைய பொண்ணுக்கு இது சான்று. செல்வி உன் இல்லறத்தை திட்ப நுட்பத்துடன் இயக்குக. செல்வி! நீ அன்பாக வாழ்! அன்பே ஆகுக! நின் வாழ்க்கைத் துணைவர் அறத்தோடு நிற்கத் தூண்டுக! துணை செய்க!

மங்கலமானது மனையறம் ஆம்! மனையறத்தின் சிறப்புக்கள் அனைத்தும் பொருந்திய மனைமாட்சியே மங்கலமாகும். அன்பு நிறைந்த மனைவி, வளமாக வாழச் செல்வம், செல்வச் செழிப்பின் நற்றாயாகிய அறிவு, செல்வச் செழிப்பின் செவிலியாகிய உழைப்பு மங்கலத்தைச் சிறப்பிக்கும் விருந்தோம்பல், ஒப்புரவு அமைந்த வாழ்க்கை முறை அமையுமாயின் அந்த மனையறம் மாட்சிமைப் பட்டதுதானே! மங்கலம் நிறைந்ததுதானே!

மங்கலமாகிய மனைமாட்சியின் பயன்-நன்கலம் நன்மக்கட் பேறு! செல்வி! மனையறம் சிறப்புடையதெனப் போற்றப்படுதலுக்கு முதற்காரணம் ஓருயிர்க்கு உய்தியளிக்கக் கூடிய இந்த வையக வாழ்க்கையை வழங்குவதானால்தான்! மனைவாழ்க்கையின் சிறந்த பயன் இன்பம் மட்டுமல்ல, மக்கட்பேறும் கூட!

செல்வி! உனக்குப் பிறக்கும் நன்மகனும், நன்மகளும் நாட்டுக்கு நலம் சேர்ப்பர், வாழ்க! உன் மனைமங்கலம்! வளர்க, நின் மக்கட் செல்வம்.

இல்லறம் அறம் எனப் போற்றப்படுகிறது. நமது நாட்டில் இல்லறம் மிகச் சிறப்புடையதெனவும் போற்றப்படுகிறது. ஆனால் துறவறத்தினும் இல்லறமே கடினமானது; பொறுப்பு நிறைந்தது. எப்படி?