பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

513



மானும் தோன்றிப் பலநூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்தப் பயணத்தில் கண்ட கொள்கைகள் பலப்பல. அவற்றுள் பல காலத்தால் அழிந்து போயின. சில வளர்ந்தும் மாறியும் உயிர்ப்போடு சமுதாயத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இன்னமும் சிலபல பழைய கொள்கைகள் வாழ்க்கைக்குப் பயன்படாதன மட்டுமல்ல, முட்டாள்தனமானவையும் நிலவுகின்றன என்பது உம் உண்மை.

இந்தியா பலவீனமைடந்த நாடு, நாளும் பலவீனம் அடைந்து வருகின்றது. அது எதனால்? சாதி வேற்றுமைகள், குலகோத்திர வேற்றுமைகள் காரணமாகப் பாரத சமுதாயம் உள்ளிடழிந்து வருகிறது. சிலர், இந்த வேற்றுமைகள் தான் இந்தியாவின் பலம், இந்தியாவைக் காப்பாற்றி வருவது என்றும் கூறுவர். வேற்றுமைகள் இருத்தல் என்பது வேறு. வேற்றுமைகளை உள்ளடக்கிக் கொண்டு சமுதாயம் வளர்வது என்பது வேறு. வேற்றுமைகள் பொருளற்றவையாகிச் செயலிழந்து காலப் போக்கில் மறைந்து விடும். இந்த நடைமுறைகள் ஒரு காலத்தில் இருந்தன. அன்று, சாதி முறைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்றோ, சாதிமுறைகள் இறுக்கமடைந்து வருகின்றன. ஒன்றோடொன்று மோதும் பகைமை சக்திகளாக உருப்பெற்று வருகின்றன. சாதிச் சண்டைகள் அன்றாட நடைமுறைகளாகி விட்டன. சாதிகளை அங்கீகரிக்கும் போக்கும், சாதிமுறைகளுக்கு ஊக்கம் தருவதும் இன்றைய அரசியலின் கோட்பாடாகி விட்டன. இது வளரும் இந்தியாவுக்கு நல்லதல்ல. பகைமையையும் பிணக்கையும் வளர்க்கும். சாதிமுறைகள் போகட்டும்! போகட்டும்! இந்தியாவை ஒன்றுபடுத்தி “எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் ஓர் இனம்; எல்லாரும் இந்தியர்” என்ற பாரதியார் கொள்கை வெற்றி பெறட்டும்.