பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

545


செல்வமாக வளமாக் நலம் சார்ந்த வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளும் ஆள்வினை வேண்டும்! ஆர்வம் நிறைந்த அன்பு வேண்டும்!

தமிழர் வழக்கில் ‘மாடு’ என்றால் செல்வம் என்று பொருள். ஆம்! மாடு, செல்வம்! மனித உழைப்புத் திறனுக்கும், பண்பாட்டுக்கும் அரிமானம் கற்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் 10 மனிதரை வைத்துக் கொண்டாலும் முன்னேற்றம் என்பது அரிதாகவேயிருக்கிறது. இருந்தாலும் முழுநிலையில் பயன்பாடு கிடைப்பதில்லை. அதற்குப் பதில் பத்து மாடுகள் வைத்துக் கொண்டால் செல்வமும் சம்பாதிக்கலாம். நன்றாகவும் வாழலாம். மன உளைச்சலே இன்றி வாழலாம். ஆனால், மனிதன் பிறப்பில் ஆறாவது அறிவு உடையவன், பிறப்பினால் உயர்ந்தவன் என்ற பெயரில் உயர்நிலைகளுக்கு உழைக்காமல் உண்பதற்கு உரிமை கொண்டாடுகின்றான்! எவருடைய உரிமைமகளும் மதிப்பிற்குரியன தான்! அறநெறி அடிப்படையில் மறுக்கப்படாதவையும் கூட! ஆனால் உரிமைகள் தகுதியின் பாற்பட்டனவாக தகுதிகளுக்கு இசைத்தனவாக இருக்க வேண்டும். இதனை மாணிக்கவாசகர் "வேண்டத்தக்கது அறிவோய் நீ!" என்று பாடினார். ஆனால் மாடுகள், பசு மாடுகளாயினும் எருதுகளாயினும் கடின உழைப்புக்களைத் தருகின்றன. பசுக்கள் குடம் குடமாகப் பால் கறந்து மனிதனுக்கு ஊட்டச் சத்து மிக்க உணவாகத் தருகின்றன. எருதுகள் கழனிகளை உழுது வளப்படுத்தப் பயன்படுகின்றன; பரம்படிக்கப் பயன்படுகின்றன; உரம் தருகின்றன. இங்ஙனம் உழைத்து மனித உலகத்திற்குச் செந்நெல்லையும் செங்கரும்பின் சாற்றையும் கொடுத்துவிட்டு உழுத மாடுகள் பயன்படாத வைக்கோலைத் தின்று உயிர் வாழ்கின்றன. இதனைப் புறநானூறு, “உழுத நோன்பகடு அழிவின்றாங்கு” என்று கூறுகிறது. கடவுள் இந்த எருதையே ஊர்தியாகக் கொண்டுள்ளான். என்ன தத்துவம்? பிறருக்கென உழைத்து மற்றவர்களை வாழ்வித்து வாழ்கிறவர்கள் நெஞ்சத்தில்