பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பல்துறைக் கட்டுரைகள்

559


காவல் கிடையாது; ஒளிவு மறைவும் கிடையாது. இங்ஙனம் ஒன்றி வாழ்தலே நட்புடைய வாழ்க்கை.

வேற்றுமையே அறியாது அனைத்திலும் ஒன்றாகவே வாழ்தல் என்று சிறந்து விளங்கிய நட்பு வாழ்க்கையில் தனது நண்பனிடம் தேற்றிக் கொள்ள முடியாத அளவுக்குக் கடுமையான - மோசமான குற்றங்கள் தோன்றினாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான குற்றங்களாவன: நண்பனுடைய பொருளை அபகரித்துக் கொள்ளுதல், நண்பனின் மனைவியை நயத்தல் போல்வன. "உண்டாயின்” என்று ஆசிரியர் சொல்வதால் இத்தகைய குற்றங்கள் தோன்றாது என்பதே கருத்து. ஒரோ வழி ஆசையின் காரணமாகவும், மற்றையோர் தூண்டுதலின் காரணமாகவும் இத்தகு கடும் குற்றங்கள் தோன்றலாம். இத்தகைய குற்றங்கள் தன் நண்பனிடத்தில் தென்படின், அவற்றைக் கண்டபொழுது ஆத்திரப்படக் கூடாது. அவசரப்படக் கூடாது. குற்றங்களுக்குரிய காரணங்களைக் கண்டு ஆராய வேண்டும். அந்த நண்பருக்கும் அறியாமல் அந்தக் காரணங்களை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதன் பின்னும், அந்த குற்றங்களினின்றும் நண்பர் நீங்காது போனால், இதமாக எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டும். அதுவும் இயலாது போனால் பொறுத்துக் கொள்ள வேண்டும். பொறுமையும் எல்லை கடந்து போய் நட்பாயிராமல் அவரே வலியப் பிரிந்து போய்விட்டால் கவலற்க. அது மட்டுமன்று, அவர்தம் குற்றத்தை மற்றவர் அறியத் தூற்றாமல் வாளா இருந்திடுக! பொறுத்தாளுக! இங்ஙனம் பொறுத்தாற்றிக் கொண்டால் நட்பில் அமைதியும் வந்து பொருந்தும். வேற்றுமையும் விரிவடையாமல் நிற்க வாய்ப்பு உண்டு. பிரிந்து சென்றவர்களும் திரும்பி வருவதற்குரிய வாயிலும் ஏற்படும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒருபால் அமையும் தகுதி சான்ற நட்பு, பிறிதொருபால் நெஞ்சறிவு லூஉவாக அமைந்து திருந்த வாய்ப்பேற்படும்.