பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

163


2. தன்னை அறிக!

அண்டம் அனைத்தையும் உரிமைப் படுத்தும்
அறிவினை அடையும் வாயில்கள் பலப்பல!
அந்த வாயில்கள் அனைத்திலும் முதன்மை
யானது வாழும் வாழ்வினை ஆழ்ந்து
அனுபவித் தறித லாகும்! முழுதும்
உறுசுவை யான உணவே யாயினும்
சிறுகுடல் பேரள வாகா திதுவெனக்
கழித்திடும் உண்மை காண்க! அதாஅன்று
நாடொறும் நாம்வாழ்ந் திடும்வாழ்வதனை
அறிந்தே வாழினும் ஆயிரம் பிழைகள்
உண்டு!அப் பிழைகளைக் கண்டவை தவிர்த்து
வாழ்வாங்கு வாழ்தலே வளர்ச்சி யாகும்;
நன்றெது? பிழையெது? என்று தேர்ந்திட
வாழ்ந்த வாழ்வினை உற்று நோக்குக!
தற்சார் பின்றித் தன்னைஆழ்ந் தறிக!
அந்த அறிவினில் தன்பிழை தெரியும்!
அப்பிழை தந்த அறியாமை தெரியும்!
அறியாமை அகற்றுக! அறிவுநலம் பெறுக!
நந்தம் நேற்றைய வாழ்விலும் நமக்குச்
சிறந்தஆ சிரியன்யார் அறிவினை நல்கவே!