பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நம்பிக்கை இழந்து கையற்று நிற்கின்ற கனத்த நெஞ்சங்களுக்கு அடிகளாரின் கவிதை வரிகள் எழுச்சியூட்டும் உணர்ச்சி வரிகள்.

அடிகளாரின் கவிதைத் தொகுதியின் இறுதியிலே தந்திருக்கின்ற, சிறுகதைகள் அடிகளாரின் ஆளுமைத் திறத்தைப் புலப்படுத்துவன.

அடிகளார் நூல் வரிசையில் வெளிவரும் இக்கவிதைத் தொகுதி அடிகளாருடைய படைப்பாளுமைத் திறமைக்குச் சான்றாக விளங்குகின்றது. வெல்லும் சொல் இன்மை அறிந்து அவர் தேர்ந்து படைத்த அவர்தம் தெளிந்த சொற்கள் படிப்போருக்கு உள்ளக் கிளர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் தர வல்லன.

சமய, சமுதாய், உலக, மானுட் மேம்பாட்டுக்குரிய புதிய புதிய சிந்தனைகளை அடிகளார் வழங்கி உள்ளார். தளர்ச்சியுற்ற மக்களுக்குத் தன்னம்பிக்கை தரவல்லன. அரசியலும். அருளியலும் இணைந்தும் இழைந்தும் வாழ்ந்தால் உலகம் மேம்பாடுறும். ஈர்ப்புள்ள மனிதனே வளர்கின்றான். ஈர்ப்புள்ள மனிதனை உருவாக்க அவருடைய சொற்கள் நமக்குத் துணை நிற்கும்.

அவர் மானுடத்திற்குத் தரும் வீறுபெற்ற வரிகள் பின்வருவன:

உன்னை வீழ்த்த இயலாது! உன்னைத் தேற்றிக்கொள்.
உன்னுடைய உணர்வுகளைச் சமநிலைப் படுத்து!
வாழ்க்கைப் போரைப் புதுப்பித்துக் கொள்!
அலை அலையென வரும் இடர்களைப் புறத்தே தள்ளு!
ஆவேசத்துடன் எழுந்து நில்!
வாழ்க்கைக் களத்தில் நின்று போராடு!
இதுவே எழுச்சியின் சின்னம் வெற்றியின் வாயில்கள்.

மணிவாசகர் பதிப்பகம் தொகுத்த இந்த நூல் இளைய தலைமுறைக்கு எழுச்சியூட்டும் நூல், வாழ்ந்த மண்ணையும் விண்ணையும் நேசித்த அடிகள் பெருந்தகையின் அருள்நிறைந்த சொற்கள் இன்றும் என்றும் வாழும் சொற்கள். வாழும் நெறிக்கு வளம் சேர்க்கும் வைரவரிச் சொற்கள்..

வாழ்வாங்கு வாழ்ந்து வளம் நிறைந்த சிந்தனைகளை வையகத்திற்கு அளித்த அடிகள் பெருந்தகையைப் போற்றுவோம்.

அடிகளின் சொற்கள் நமக்கு வெற்றி வாயில்களாக ஆகட்டும். எழுச்சியின் சின்னமாக மலரட்டும்.

மணிவாசகர் பதிப்பகத்தின் இவ்வரிய நூல் தமிழ்ச் சிந்தனை மரபிற்கு ஒரு புதிய வரவு, தமிழ்கூறும் நல்லுலகம் இதனை ஏற்றுப் - போற்றி வரவேற்குமாக.

பதிப்புச் செம்மல் மெய்யப்பனாரின் இவ்வரிய முயற்சிகள் - ' மென்மேலும் வெற்றி பெற வேண்டுவோமாக.

தஞ்சாவூர்.
25.12.2002