பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

179


17. துலாக்கோல்

பொருளைக் கொடுப்போர் வாங்குவோ ரிடையில்
நெறிமுறை காத்து நிற்பது துலாக்கோல்!
எடைநிறைக் கல்லும் எடைக்குறு பொருளும்
சமநிலை யாக அமைதல்நல் வாணிகம்!
துலையின் நடுவே உருவம் சிறியதாய்
நிற்குமுள் போன்றது சமூக நீதி!
அந்தமுள் எந்தப் பக்கமும் சாராது
நின்றிடும் தன்மைபோல் அறநிலை நிற்றல்
வாணிகத் திற்கு அழகுஇவ் வையக
வாழ்வியல் கூட்டுற வாகஆ யதுவே.
கணவனும் மனைவியும் அமைந்த குடும்பம்
கூட்டுற வாகும் கூடிவாழ் இருவரும்
சமநிலை பேணல் உறவினுக் கழகு!
ஒருவரோ டொருவர் உணர்வுடன் கூடி
உலகியல் நடத்துதல் உயர்தோ ழமையாய்
அமைந்த அழகிய கூட்டுற வாகும்!
ஒருவர்மற் றொருவர் நலனை நாடுதல்
நடுநிலை சார்ந்த நலக்கூட் டுறவாம்!
எவரே யாயினும் அவரை மனிதராய்
மதித்துஅவர் கருத்தையும் செவிப்புலன் மடுத்து
ஆய்வுசெய் தொருநிலை யாய்நின் றெடுத்த
நல்லதோர் முடிவே நாட்டுக்கு நல்லது!
நடுவாய் என்றும் நிற்றலே
நலத்தின் சால்பென நவிலவும் படுமே!