பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

299


126. துணிவும் வலிமையும்

'மனிதன் மனிதனாக விளங்கட்டும்’
மனிதன் மனிதனாவதில் வெற்றி பெறின்
அவனுடைய மனப்போரில் வெற்றி பெறுவான்!
எந்த மனிதனும் விளையாட்டுப் பிள்ளையாக விளங்கி
எதையும் இழக்கலாம்!
அல்லது விளையாடும் குழந்தையாக விளங்கலாம்!
அல்லது பருவம் பூத்துக் குலுங்கும் இளமையாகி
விளையாடலாம்!
எப்படி இருந்தால் என்ன? மனிதனல்ல!
எவன் மக்களுக்குப் பயன்படுவதில்
அடிமையாக இல்லையோ,
அல்லது வெற்று மனிதனாக இல்லையோ,
அவன் துணிவும் வலிமையும் உடையவனாகித்
துன்புறு தொல்லைகளைக் கடந்து நிற்பான்!
உன் இதயத்துக்குள் இரண்டு மனிதர்கள்
கச்சைகட்டிக் கொண்டு போராடுகின்றனர்!
நல்லது வெற்றி பெற்றால்
நீ உன்னையே காண்பாய்!
நீ, வாழ்க்கைப் போரில் வெற்றி பெறுவாய்!
நீ, மனிதத்தில் வெற்றி பெறுவாய்!
நீ, மனிதனாவாய்!
மனிதம் மேன்மையுறும்
நீ, மனிதனாகிவிட்டால்
மற்றெல்லாம் உன் நிழல்!
இந்த ஞானம் ஞானிக்கு உரிமையுடையது!