பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

467

        அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;
             அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை;
        தன்னை மறந் தாள்தன் நாமம் கெட்டாள்;
             தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

என்ற அப்பர் பெருமானின் திருவாக்கு நம் வாழ்வைப் பொருத்தவரையில் முழுமையும் உண்மையாயிற்று உறவுகளைத் தவிர்த்துத் துறவு என்னும் விரிந்த உலகில் உலக உறவுகளை நம் உறவுகளாய்ப் பேணும் பயணம் தொடர்கின்றது.

‘மண்ணும் மனிதர்களும் நம்மைப் பக்குவப் படுத்தியது. இமயத்தின் சுமை இந்தச் சிறிய குருவியின் தலையில் ஏற்றப்பட்டுள்ளது. இருந்த பொழுதும் நம்பிக்கைச் சிறகை நீங்கள் நல்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு உயரப் பறந்து உலகை வலம் வருவோம்! மனித நேய மகாமேரு காட்டிய திசையில் தடம் மாறாத பயணம் என்றும் தொடரும் நம் அருள்நெறித் தந்தை அறியாமை இருள் அகற்ற உதிர்த்த ஞான மொழிகள் பேச்சிலும், எழுத்திலும் வந்தவை, இங்கு நூலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ அரை நூற்றாண்டு கால மேடைத் தவமும், எழுத்துத் தவமும் நூல்வரிசையாக நம் கையில் நூலைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட மகாசன்னிதானத்துடன் உடன் உறைந்து, உடன் வாழ்ந்து இன்று நமக்கு மகாசன்னிதானத்தின் தடத்தை அடையாளம் காட்டிவரும் ஆதீனப்புலவர் மரு. பரமகுரு. காரைக்குடி இராமசாமி. தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ. முருகசாமி, காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரிப் பேர்ாசிரியர் நா. சுப்பிரமணியன், எழுத்துச் செம்மல்.’ குன்றக்குடி பெரிய பெருமாள், ஆதீனப்புலவர் க. கதிரேசன் ஆகியோருக்கும் இந்நூல்வரிசையைச் சிறப்பாகப் பதிப்பித்து முத்திரை பதித்த வித்தகர் பதிப்புச்செம்மல் மெய்யப்பனார். அவர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றி! வாழ்த்து பாராட்டுக்கள்!.

தமிழகம் மேம்பாடுற இந்நூல்வரிசை பயன்தரும்!

என்றும் வேண்டும்
இன்ப அன்பு.
(பொன்னம்பல அடிகளார்)