பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

43


முடிப்பு:

சொக்கத் தமிழில் நமையெலாம் சொக்க
வைத்த சுந்தரம் வள்ளுவன் பார்வையில்
கடவுளைக் காட்டினர்! கண்டுநாம் சுவைத்தோம்!
வாழிய சுந்தரம் வண்டமிழ் எனவே!

2. கவிஞர் மீனவன்

அறிமுகம்:

கடவுளை யடுத்துக் கருதத் தக்கவன்
தலைமகன் ஆவான். அலைகடற் கரையின்
மணலையும் எண்ணிக் கணக்கிடல் மானும்!
ஆனால் இந்த அவனியின் மக்கள்
தொகைகணக் கினில் தொடரும் அடங்காமல்!
கதிரவன் தோன்றி மறைகிறான். ஆனால்
கரு, வாய் மறைத்தவர் தம்மைக் காண்கிலம்!
பிறந்த மக்களில் பீழைக ளாகிச்
செத்து, மடிபவர் எத்தனை, எத்தனை?
ஆன்ற அறிவும் ஆள்வினைத் திறனும்
தேர்ந்து தெளிந்து தொழில்பல இயற்றிப்
பொருளினைப் பெருக்கும் துறைபல கண்டு
பெரும் பொரு ளீட்டிப் பிடுற வகுத்துப்
பலரொடும் பகிர்ந்து வாழும் பண்பினன்
எவனோ அவனே தலைமக னாவான்!
இனநலம் சார்தலும் குணநலன் காத்தலும்
கன்னித் தமிழை யொத்த காரிகை
தன்னைக் காதல் புரிந்துளங் கலந்து
மனையறம் நடாத்தி மண்ணகம் புகழ்ந்திடும்
மக்கட் பேற்றினைப் பெற்று மாண்புசால்
சிறப்பில் தங்கும் சீரியோன் தலைமகன்!