பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறிந்து தேவையறிந்து ஆசிரியர்கள் வழங்க வேண்டும்-ஆசிரியரால் வழங்கப் பெற்ற கருத்துணவைச் செறித்து செயல்படுத்தப் பெற்றோர்கள் துணை நிற்கவேண்டும். மனித குலத்திற்குள் அன்பு வழிபட்ட துணையும் அமைதி தழுவிய நல்வாழ்க்கையும் வளர-ஒழுங்கு வளர ஆசிரியர்களும் பெற்றோர்களும் முயற்சித்து வெற்றியடைய நம்முடைய பிரார்த்தனை.

14. வளம் குன்றியது ஏன்?

செல்வ வளம் கொழித்த நாடு செந்தமிழ் நாடு. சோறு படைத்த நாடு; வறுமையின் வாடையே தெரியாத நாடு, ஒரு காலத்தில். இப்பொழுது எங்கும் பட்டினி-பஞ்சம் தலை காட்டுகிறது. உணவுப் பொருள்கள் உற்பத்தி குறைந்து வருகின்றன. தமிழ் நாட்டில் இயற்கை உணவுகள் பல உண்டு. சிறப்பாகக் கிழங்கு, தேன், பழவகைகள். இவைகள் தமிழகத்திலேயே விளைவிப்பாரின்றி விளைந்து கொண்டிருந்தன.

உழவர் உழாத, நன்கு பயன்படு பொருள்களை நிறையக் கொண்டிருந்தது தமிழகம் என்று சங்க இலக்கியங்களால் பெறப்படுகிறது. பாரியினது பறம்பு நாடு இத்தகைய வளம் நிறைந்தது என்று கபிலர் பாடுகின்றார். மூங்கில், நெல், பலாப்பழம், வள்ளிக்கிழங்கு, தேன் முதலியவை நிலமகள் தாமே அளித்த தகவுடைப் பொருள்கள். உழவர் உழுது பயிரிடும் பொருள்களும் செழுமையுடன் வளர்ந்து வளம் பெருகின நாடு இந்த நாடு. பண்டைத் தமிழகம் களிற்றைக் கொண்டு கதிரடித்தது. ஆனால் இன்றையத் தமிழகம் நேர்மாறான நிலையில் காட்சி தருகிறது. இன்று தாமே விளையும் பொருள்களின் மிகுதி இருப்பதாகத் தெரியவில்லை. பாரி வள்ளல் இருந்த, பறம்பு மலையாகக் கருதப்படுவது இன்றைய பிரான்மலையேயாம். இப்பிரான்