பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

397


வேதனைக் குரலில் எப்படிச் சமயத்தை வளர்க்க முடியும்? தந்தையும் தாயுமாக விளங்கும் ஆண்டவன் திருக் கோயில்களுக்கு முன்பே ஏழைகளின் பட்டாளத்தைப் பார்க்கும் பரிதாபகரமான காட்சியை என்னென்பது? இந்த நிலையில், சமய வளர்ச்சிப் பணியில் இறங்கிய நாம், முதலில் பசிப் பிணிக்கு மருத்துவம் தேவை என்பதை உணர்ந்தோம். இதே நிலையில் வினோபாஜியால் பூமிதான இயக்கம் தொடங்கப் பெற்றது. இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் ஏழ்மையை நீக்க இந்த இயக்கம் பெரிதும் உதவுமென்று நாம் நம்பினோம். இந்த இயக்கம் வெற்றி பெறும்போது மக்களிடையே நிலவியுள்ள தீய உணர்ச்சிகள் அருகி, நல்லற உணர்ச்சிகள் பெருகும். அதன் காரணமாக, சமய வாழ்வும் நாட்டில் மலர்ந்து விடுமென்ற அளவுகடந்த நம்பிக்கையுடன் பூமிதான இயக்கத்திற்கு நம்முடைய ஆதரவையும் வாழ்த்தையும் உரியதாக்குகின்றோம்.
தொகுப்புரை

அருளறம் பேணும் பேரன்பர்களே! வையம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம். நமது உடன் பிறந்த சகோதரர்களின் துன்பம் துடைக்க மனமுவந்த பலவகையானும் தானம் செய்யுங்கள். எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுங்கள். ஈத்துவக்கும் இன்பம் இணையில் இன்பம். ஈத்தலின் மூலம் இந்திய நாட்டைச் சிறைக்கூடம் இல்லாத நாடாக சிவமணம், கமழும் திருநாடாக ஆக்குங்கள். அதுவே அருள் நெறி.

வளர்க அருள் நெறி!

வாழ்க காந்தியம்

இன்பம் பொலிக!