பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சார்ந்தது. பழமை வாய்ந்த மரபுகளைப் புதுப்பித்தாலே போதும்! இதுவே நமது குறிக்கோள்.

நமது சமுதாயம் வேற்றுமைகள் அனைத்தையும் கடந்து ஒன்றுபடவேண்டும். ஒருமைப்பாட்டு உணர்வில் கலந்து ஒரு குலமாகிக் கூடிவாழ்தல் வேண்டும். நமது திருக்கோயில்கள் விளக்கமுறுதல் வேண்டும். திருக்கோயில்களைத் தழுவிக் குடிகள் வாழ்தல் வேண்டும். திருக்கோயில்கள் குடிமக்களைத் தழுவி நிற்க வேண்டும். நாட்டு மக்களில் கடைக்கோடி மனிதனுக்கும் தேற்றம் வேண்டும். தமிழ், துறை தோறும் வளரவேண்டும். நாட்டு மக்கள் வறுமை - ஏழ்மையிலிருந்து மீட்கப்படுதல் வேண்டும். இந்தக் குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது. நடக்கவேண்டிய தூரம் அதிகம். ஆதலால், விரைவில் நடந்து முடிக்க அடுத்து வருபவர்கள் விரைந்து வந்து உதவுவதன் மூலம் வரலாற்றின் ஏடுகளை நிரப்ப உதவுவார்கள் என்று நம்புகிறோம்.

இந்தப் பயணத்தின் முன்னோடிகளாக நாம் ஏற்றுக் கொண்டவர்கள் திருவள்ளுவர், அப்பரடிகள், ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், திரு.வி.க. முதலியோர். நமது வாழ்க்கையில் ஊக்குவிப்புச் சக்திகளாகப் பெருந்தலைவர் காமராஜரும், தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இருந்தார்கள். இன்று நம்முடைய வாழ்வில் துணையாக - இயக்கும் சத்தியாகக் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகள் விளங்குகின்றனர்.

பொதுப்பணி என்றால் வங்கிகளின் உதவி தேவை. ஒரு நாள் திருப்புத்துர் ஸ்டேட் வங்கி மேலாளர் என். சீனிவாசன் டெப்பாசிட் திரட்டுவதற்காக வந்தார். நாம் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மீது ஒரு தவறான கருத்தைக் கொண்டிருந்தோம். ஆதலால், அவர் வந்தவுடன் "இங்கு ஏது டெப்பாசிட்? உங்கள் வங்கி மூலம் கிராமங்களுக்கு, ஏழை