மகிழ் உரை
பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் கருத்துக் கருவூலங்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடும் பேற்றினை மணிவாசகர் பதிப்பகம் பெற்றது. 16 தொகுதிகளில் 7200 பக்கங்களில் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது. இப்பெருந் திட்டத்திற்கு இசைவளித்த தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களை வணங்கி நன்றி செலுத்துகிறோம். இத்தொகுப்புக்கு மூலவிசையாக அமைந்த கவிஞர் மரு. பரமகுரு அவர்களுக்கு நன்றி. நூல் உருவாகும்பொழுது முழு ஒத்துழைப்பு நல்கிய முனைவர் தெ.முருகசாமி அவர்களுக்கு நன்றி. பதிப்புக்குழு உறுப்பினர்களான குன்றக்குடி பெரியபெருமாள், நா.சுப்பிரமணியன். க. கதிரேசன் ஆகியோருக்கும் நன்றி. 16 தொகுதிகளுக்கும் அணிந்துரை அளித்த அறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் நன்றி. ஆயிரம் நூல்களை வெளியிட்ட மணிவாசகர் பதிப்பகம் அடிகளார் நூல்வரிசைச் செம்பதிப்பு வெளியீட்டை எண்ணிப் பெருமிதம் கொள்கிறது. பதிப்பகங்களே பாராட்டும் பதிப்புகளாக இவை அமைந்துள்ளன. அலைகடலுக்கு அப்பாலும் ஆர்வமாகஉள்ள அடிகளாரின் வாசகர்களுக்கும் அன்பர்கள், வாசக நேயர்கள். வளர்தமிழுக்கு ஆக்கம்தரும் அனைவருக்கும் நன்றி!
அடிகளாரின் புதியஎண்ணங்கள். புரட்சிக் கருத்துக்கள், சிந்தனை மின்னல்கள், எழுச்சியுரைகள் எல்லாவற்றையும் ஒருசேரத் தொகுத்துக் கொடுப்பதில் பதிப்புக்குழுவின் செயலர் என்ற முறையில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. சங்கப்பாடல் சொல்வதுபோல், பல்லோர் உவகை என்னுள் பெய்தற்று என்று நினைந்து இன்களி மகிழ்நகை கொள்கிறேன். இத்தொகை வலிமைபெற, வளம்பெறத் துணை நின்ற என் மகன் மெ. மீனாட்சி.சோமசுந்தரத்திற்கும். பதிப்பக மேலாளர் இரா.குருமூர்த்திக்கும் நன்றி!